தமிழக அரசியல் வரலாற்றில் “மதுரையை வெல்பவர்களே கோட்டையைக் கைப்பற்றுவார்கள்” என்றொரு எழுதப்படாத விதி உண்டு. அந்த அளவுக்கு ஒட்டுமொத்த தென்மாவட்ட அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாக மதுரை விளங்கி வருகிறது.
சமீபத்திய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, மதுரையின் அரசியல் களம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பூகம்பத்தைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. திமுகவின் தோல்விக்குக் மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படும் உட்கட்சிப் பூசல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மதுரையில் ஆழமாக கால் பதிக்க தவெக நடத்திய திரைமறைவு ஆபரேஷன் இப்போது அம்பலமாகியுள்ளது.
தோல்வி ஆராய்ச்சி குழுவின் ‘ஷாக்’ அறிக்கை
மதுரையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளை திமுக கோட்டை விட்டதற்கான பின்னணி குறித்து ஆராய, கட்சித் தலைமை அமைத்த ‘தோல்வி ஆராயும் குழு’ சமர்ப்பித்த அறிக்கை தான் தற்போதைய ஒட்டுமொத்தப் பூகம்பத்திற்கும் முதல் புள்ளி. மதுரையில் திமுகவின் சீனியர் தலைவர்களுக்கும் (அமைச்சர் மூர்த்தி தரப்பு), இளைஞரணியினருக்கும் இடையே நிலவும் ஏழாம் பொருத்தமே இந்த படுதோல்விக்குக் காரணம். சீனியர்கள் தேர்தல் களத்தில் இளைஞரணியினரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. இளைஞரணியினரும் சீனியர்களின் கட்டளைக்கு முழு ஒத்துழைப்புத் தரவில்லை. இந்த ‘இடைவெளி’ தான் தற்போது தவெகவிற்கு மிகப்பெரிய நுழைவுச் சீட்டாக மாறியுள்ளது.

உதயநிதி – அன்பிலின் ‘வலதுகரம்’ மருது
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அவரது நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷுக்கும் தென்மாவட்டங்களில் மிக முக்கிய ‘வலதுகரமாகச்’ செயல்பட்டு வந்தவர் மதுரை இளைஞரணியின் ஒருங்கிணைந்த மாவட்டப் பொருளாளர் ‘மருது’. மதுரையில் திமுக சார்பில் எந்தவொரு பொதுக்கூட்டம், மாநாடு அல்லது ஆர்ப்பாட்டம் என்றாலும், ஒற்றை ஆளாக நின்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி, பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டும் அசாத்திய களப்பணித் திறன் கொண்டவர். கட்சிக்காகத் இரவு பகலாக உழைத்தும், சீனியர் அமைச்சர்கள், மாவட்டத் தலைமையின் தொடர் புறக்கணிப்பு மற்றும் முட்டுக்கட்டைகளால் மருது தரப்பு கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தது.
இதை மிகச் சரியாக மோப்பம் பிடித்த தவெகவின் தென்மண்டலப் பொறுப்பாளர்கள், மருதுவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, பனையூரில் இணைய நாள் குறித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருது வெறும் தனிநபராக மட்டும் தவெகவிற்கு நகரவில்லை. அவரோடு சேர்ந்து மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த திமுக இளைஞரணி நெட்வொர்க்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களும், நிர்வாகிகளும் கொத்தாக தவெகவிற்கு மாறத் தயாராகிவிட்டனர்.
மதுரையில் திமுகவின் தேர்தல் எந்திரமாகச் செயல்பட்ட இளைஞர் பட்டாளம் மொத்தமாக முடங்கும். தவெகவிற்கு தென்மாவட்டத்தில் ஒரு ரெடிமேட் ‘தேர்தல் ஆர்மி’ கைக்குக் கிடைக்கும். சீனியர்களின் தனிமைஅடிமட்டத் தொண்டர்கள் இல்லாத சூழலில், வெறும் ‘தலைகள்’ மட்டுமே திமுகவில் எஞ்சியிருக்கும். மதுரையில் தவெகவின் கொடி மிக வலுவாகவும், பிரம்மாண்டமாகவும் அடிமட்ட அளவில் ஊன்றப்படும்.
தென்மண்டலத்தில் விஜய்யின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’
ஏற்கனவே மதுரையில் பாரம்பரிய மாஜிக்களின் செல்வாக்கு சரிந்து வரும் வேளையில், திமுகவின் மிக முக்கியமான வாக்கு வங்கியான ‘இளைஞர் சக்தியை’ மருது மூலமாக விஜய் அப்படியே அள்ளிக் கொண்டு போவது அறிவாலயத்தை நிலைகுலையச் செய்துள்ளது. “சீனியர்களின் அகங்காரத்தால்” தங்களின் உழைப்பு வீணாவதை விரும்பாத மருது கோஷ்டி, தவெகவை தங்களின் புதிய அரசியல் புகலிடமாகத் தேர்வு செய்துள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளிலும் மதுரை திமுகவிற்கு இந்த ‘மருது கோஷ்டியின்’ வெளியேற்றம் ஒரு மீள முடியாத சம்மட்டி அடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
