Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள ‘தவெக எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேர விவகாரம்’ தற்போது போலீஸ் விசாரணை, கைதுகள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை, எதிர் கட்சியான திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் திமுகவின் மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் “செந்தில் பாலாஜியின் அதிரடி ஆக்ஷன்களால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர்” என்று குமுறி வரும் நிலையில், மறுபுறம் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்களும், அவருக்கு நெருக்கமான கரூர் வட்டாரங்களும் இந்த விவகாரத்தை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார்கள்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்று இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் நியாயப்படுத்துகிறார்கள் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.

ஜெயித்திருந்தால் இது மாஸ்டர் பிளான்
அறிவாலய வட்டாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் குமுறல்கள் வெடித்தாலும், கரூர் கம்பெனி, செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசிகள் எதற்கும் அஞ்சுவதாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், அவர்கள் தங்களின் அரசியல் பார்வையை மிக ஓப்பனாகவே முன்வைக்கிறார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதானே அரசியல்!”
“சார்.. அரசியல்வாதிக்கு முதல் மற்றும் முக்கிய இலக்கே அதிகாரத்தில் இருப்பதுதான். அதிகாரம் இல்லாமல் வெறும் கொள்கையை மட்டும் பேசிக்கொண்டு அரசியல் நடத்த முடியாது” என்று சாதாரணமாக ஆரம்பிக்கிறார்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்.

“இன்றைக்கு இந்திய அளவில் இருக்கும் பாஜக-வை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆட்சியைப் பிடிக்கவும், அதிகாரத்தைத் தக்கவைக்கவும் போகாத எல்லைகளா? செய்யாத ஆபரேஷன்களா? மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பல மாநிலங்களில் ஓவர் டேக் செய்து, எல்லா எல்லைகளுக்கும் போய் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லையா? அதை டெல்லியில் செய்தால் ‘சாணக்கியத்தனம்’, அதையே கரூர்க்காரர் செய்தால் ‘குதிரை பேரமா’?” என திருப்பிடியடிக்கிறார் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நிர்வாகி.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்தும்போது சில நேரங்களில் கணக்குகள் தப்பலாம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “அண்ணன் செந்தில் பாலாஜியும், தம்பி அசோக்குமாரும் போட்ட ஸ்கெட்ச் இந்த முறை மிஸ்ஸாகிவிட்டது உண்மைதான். சில ரகசிய ஆபரேஷன்கள் ஃபெயிலியர் ஆகும்போது, அதன் பழியும் பின்தொடரும் விளைவுகளும் எங்கள் மீது வந்து விழுவது ஒன்றும் புதியதல்ல. இதெல்லாம் அரசியல்ல ரொம்பவே சகஜம்” என்கிறார்கள் அலட்சியமாக.

“கட்சிக்கு நல்லது செய்யதானே பார்த்தோம்”
செந்தில் பாலாஜி தரப்பு இந்த ஆபரேஷனைத் தனது சொந்த லாபத்திற்காக மட்டும் செய்யவில்லை, ஒட்டுமொத்தமாக தவெக அரசை முடக்கி, திமுகவின் அரசியல் பிடியை இறுக்கவே முயன்றதாகக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தவெக எம்.எல்.ஏ-க்களை வளைத்து, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் செந்தில் பாலாஜியின் இந்த ‘மாஸ்டர் ஸ்கெட்ச்’ மட்டும் ஜெயித்து, விஜய் அரசு கவிழ்ந்திருந்தால், இதே திமுக நிர்வாகிகள் கொண்டாடியிருக்க மாட்டார்களா?

அண்ணனும், தம்பியுமான செந்தில் பாலாஜியும், அசோக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றச் செய்யும் இத்தகைய அதிரடி சம்பவங்கள் ஜெயித்து இருந்தால், அது இந்த கட்சிக்குத்தானே பலம்? அப்போது ‘கட்சியைக் காப்பாற்றிய ரட்சகர்’ என்றுதானே பாராட்டியிருப்பார்கள்? இப்போது ஆபரேஷன் ‘பேக் ஃபயர்’ ஆனதால் ஒட்டுமொத்த பழியையும் அவர்கள் மீது போடுவது நியாயமில்லை என்பது இவர்களின் வாதம்.

அண்ணன்-தம்பியின் ‘நெவர் கிவ் அப்’ பாலிடிக்ஸ்
செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய இருவருமே ஆரம்பத்திலிருந்தே சவாலான அரசியலைச் செய்து பழகியவர்கள். எந்தவொரு நெருக்கடி வந்தாலும் சரி, சிறைக்கே செல்ல நேரிட்டாலும் சரி, மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல அரசியல் களத்திற்குள் மாஸாக என்ட்ரி கொடுப்பதுதான் இவர்களின் பாணி.

தற்போது தவெக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் அறிக்கை இவர்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தாலும், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதனை எதிர்கொள்ள ‘கரூர் பிரதர்ஸ்’ தயாராகிவிட்டதாகவே அவர்களின் ஆதரவுக் கூக்குரல்கள் உணர்த்துகின்றன.

“அரசியல் களம் என்பது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதில்லை. இன்று விழுந்தவர்கள் நாளை மீண்டு எழுவார்கள்” என்ற நம்பிக்கையோடு, தங்களின் தலைவனின் ‘அதிகார வேட்கை’ அரசியலை தற்போதும் தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறார்கள் செந்தில் பாலாஜியின் உடன்பிறப்புகள்.

One thought on “நல்லது செய்யதானே பார்த்தோம்.. தவெக எம்.எல்.ஏ-க்களை தூக்கியிருந்தால் கொண்டாடியிருக்க மாட்டீங்களா..? திமுகவுக்கு செந்தில் பாலாஜி டீம் செக்..!”
  1. அரசியலில் ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிப்பது தான் இலக்கு. பாஜக அப்படித்தான் செயல்பட்டது. தவெக தனது ஆட்சியைத் தக்க வைக்க அதிமுகவை அழிக்கிறது. ஆனால் ஆட்சியைத் திமுக கைப்பற்றும் நிலை இப்போது இல்லை. தவெக நூற்றுக்கு மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. அதற்கு மத்தியப் பாஜக ஆதரவும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது திமுகவின் எத்தகைய முயற்சியும் பயனளிக்காமலே போகும். திமுக ஆட்சியில் இருக்கும்போது அட்டூழியம் செய்யாமல் நல்லாட்சி செய்திருந்தால் இப்படித் தவறான வழிக்கெல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. மக்களே திமுகவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். திமுக செய்த தவறுகளையெல்லாம் இப்போது தவெக செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நேர்ந்த அதே கதி அடுத்த தேர்தலில் தவெகவுக்கு நேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago