Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக ஆட்சியைப் பலவீனப்படுத்தவும், கவிழ்க்கவும் திரைமறைவில் அரங்கேறிய குதிரை பேர விவகாரத்தில், தற்போது பல அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆளும் தரப்பு எம்.எல்.ஏ-க்களையே மிரட்டும் அளவுக்கு இந்த சதித் திட்டம் எவ்வளவு ஆழமாகத் தீட்டப்பட்டுள்ளது என்பதும், இதில் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதும் குறித்த புலனாய்வுத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பணத்தைத் தாண்டிய பதவி பேரம்
பொதுவாக இது போன்ற பேரங்களில் பணத்தைத் தாண்டி பெரிய பதவிகள் அல்லது அமைச்சர் பொறுப்புகள் தருவதாகப் பொய் வாக்குறுதிகள் தரப்படும. ஆனால், இந்த சதியில் ஈடுபட்ட நெட்வொர்க் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடையக் கூடாது என்பதற்காக, தற்போதைக்கு எந்தப் பதவி கமிட்மெண்ட்டும் புதியவர்களுக்குத் தரப்படவில்லை. அதற்குப் பதிலாக, “ஆட்சியைத் தலைகீழாக மாற்றி நாம் ஆளுங்கட்சியாக வரும்போது, உங்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுத் தர நான் முயற்சி செய்கிறேன்” என்று மட்டுமே பேசியுள்ளனர்.

மேலும், “பதவிகளை விட உங்களுக்கு என்ன பெரிய தொகை வேண்டுமோ, அதை நீங்கள் கட்சி மாறுவதற்கு முன்பாகவே கையில் கொடுத்து விடுகிறோம்” என்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே பேரம் பேசியுள்ளனர்.

ஊத்தங்கரை எம்.எல்.ஏ-வுக்குக் டார்ச்சர்
இந்த டீலிங்கின் படி, ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித போலி வாக்குறுதியும் தராமல், நேரடியாக ரூ.35 கோடி பேரத் தொகையை மட்டுமே திருநாவுக்கரசு மூலமாகத் தொடர்ந்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்தத் தொடர் அழுத்தம், மிரட்டல்களைத் தாங்க முடியாமல், அது தனக்குப் பெரும் டார்ச்சராக மாறியதாக உணர்ந்த பின்னரே, சம்பந்தப்பட்ட தவெக எம்.எல்.ஏ காவல்துறைக்குத் தைரியமாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரே தற்போது திருநாவுக்கரசுவின் கைதுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தப்பியோடத் தயாராக இருந்த 8 எம்.எல்.ஏ-க்கள்
காவல்துறை விசாரணையில் கிடைத்துள்ள மிக முக்கியமான தகவலின் படி, தவெக கட்சியை விட்டு வெளியேறி மாற்று முகாமிற்குச் செல்ல சுமார் 8 முதல் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்துள்ளனர். குறிப்பாக, தங்களது சொந்தத் தொகுதிகளில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் சில முக்கிய எம்.எல்.ஏ-க்கள், “நாங்கள் கட்சி மாறினால் எங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. அதற்குரிய அங்கீகாரம் அங்கும் வேண்டும்” என்று நிபந்தனை விதித்துப் பேசியுள்ளனர்.

தகவல் கசிந்ததால் பின்வாங்கிய எம்.எல்.ஏ-க்கள்
ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே இந்த ரகசிய பேரத் திட்டங்கள் உளவுத்துறை, தவெக தலைமைக்கு லீக் ஆகியுள்ளது. விஷயம் தலைமைக்குத் தெரிந்தால் தங்களை முற்றிலுமாக நீக்கிவிடுவார்கள். அதன் பிறகு அங்கும் போக முடியாமல் இங்கும் இருக்க முடியாமல் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்று அஞ்சிய அந்த எம்.எல்.ஏ-க்கள், உடனடியாகப் பேசாமல் ‘கப்சிப்’ எனத் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது தவெக-விலேயே தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

போலீஸாரிடம் ரகசிய பட்டியல்
தற்போது கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், யார் யாருக்கெல்லாம் பேரம் பேசப்பட்டது? யார் யார் டீலிங்கிற்கு ஒத்துக்கொண்டார்கள்? என்ற ரகசியப் பட்டியலைக் காவல்துறை தயாரித்துத் தன் வசம் வைத்துள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட அந்த எம்.எல்.ஏ-க்களிடமும் நேரடி விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒட்டுமொத்தப் பின்னணியும், முழுமையான உண்மைத் தன்மையும் வெளிவர வேண்டும் என்றால், இந்தச் சதியின் சூத்திரதாரியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் தலைமறைவாக இருக்கும் அவரது தம்பி அசோக் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீர விசாரணை நடத்தினால் மட்டுமே சாத்தியம் என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago