Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருள்ராஜ் (32) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவர் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும், பின்னர் மீண்டும் மது அருந்தத் தொடங்கியதால் குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு அருள்ராஜ் கடும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது தாயை தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தாயை பார்க்க வந்திருந்த தனது தங்கையையும் மிரட்டி, அவரது குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தட்டிக்கேட்ட தந்தை தாளமுத்து (60) என்பவரையும் அருள்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டை பூட்டிக்கொண்ட நிலையில், அருள்ராஜ் வீட்டின் வாசல் அருகே படுத்து உறங்கியுள்ளார்.

இன்று அதிகாலை (ஜூலை 1, 2026), ஆத்திரமடைந்த தந்தை தாளமுத்து, வீட்டில் பெயிண்டிங் பணிக்காக வைத்திருந்த தின்னர் திரவத்தை தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில், உடல் முழுவதும் தீப்பற்றி கருகிய அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு, தாளமுத்து சிப்காட் (SIPCOT) காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அருள்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago