Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக அமைச்சரவை பதவியேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள்ளாகவே கோட்டையில் ‘அமைச்சரவை மாற்றப் புயல்’ வீசத் தொடங்கியிருக்கிறது.

துறை ரீதியாக நடத்தப்பட்ட ரகசிய ஆய்வுகள், எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த புகார்கள் மற்றும் அமைச்சர்களின் உள்ளூர் அரசியல் எனப் பல காரணங்களால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஒரு மெகா அமைச்சரவை மாற்றத்திற்கு முதல்வர் விஜய் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் அலுவலகத்தின் ரகசிய ‘ரிப்போர்ட்’
அரசு அமைந்த ஆரம்பத்திலேயே, அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் விஜய் குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்திருந்தார். ஆனால், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வருக்குத் துளியும் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்காகவே முதல்வர் அலுவலகம் மூலம் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் கண்காணிக்கப் பிரத்தியேகக் குழு அமைக்கப்பட்டு, ரகசியத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆய்வின் முடிவில் வெளியான தகவல்கள் முதல்வரை அதிருப்தி அடையச் செய்துள்ளன. ஒருசில அமைச்சர்கள் தங்கள் துறையில் என்ன நடக்கிறது, கோப்புகளில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாமல், வெறும் ‘அமைச்சர் பந்தா’ மற்றும் அரசு வாகனங்களை மட்டுமே அனுபவித்து வருவதாக அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

தென் மாவட்ட யுத்தம்… தாம்பரம் விவகாரம்
அமைச்சரவை மாற்றத்திற்கான அவசரக் காரணங்களாக இரண்டு முக்கிய விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள், மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டு, தங்களுக்குள் “யார் பெரியவர்?” என்கிற ஈகோ யுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது கட்சியின் பெயரையும், அரசின் இமேஜையும் பொதுமக்களிடையே கடுமையாகப் பாதிப்பதாக முதல்வர் கருதுகிறார்.

தாம்பரம் எம்.எல்.ஏ-வும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி, எதிர்க்கட்சியான தி.மு.க. சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதுடன், தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே, பெர்பாமென்ஸ் இல்லாத அமைச்சர்களைக் குறிவைத்து விமர்சிக்கத் தி.மு.க. தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களுக்கு நாமே ஆயுதம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

ஆளுநர் மாளிகை விசிட்… அடுத்து என்ன?
செயல்படாத அமைச்சர்களை வீட்டில் உட்கார வைக்க முதல்வர் முடிவெடுத்துவிட்டார். இதன் முதற்கட்டமாகவே, தமிழகச் சபாநாயகரும், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாரும் சமீபத்தில் திடீரென ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்து வந்ததாகக் கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. புதிய அமைச்சர்கள் சிலரைப் பட்டியலிடவும், தற்போதைய அமைச்சர்களை நீக்குவது குறித்தும் ஆளுநரிடம் முறைப்படியான ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசியல் கூர்நோக்கர்கள் கணிக்கின்றனர்.

பெர்பாமென்ஸ் இல்லாதவர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் இந்த ‘அமைச்சரவை அறுவை சிகிச்சை’ விரைவில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago