Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் உணவு விமர்சனம் (Food Review) செய்யும் யூடியூபர்களுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை புதிய வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி, இனி யூடியூபர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட்டு, FSSAI (Food Safety and Standards Authority of India) உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்ற உணவகங்களில் மட்டுமே உணவு விமர்சன வீடியோக்களை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு விமர்சனம் மேற்கொள்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு முறையான உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா, உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கையுறைகள், தலைக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கிறார்களா என்பதையும் யூடியூபர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, குடிநீர், உணவு தயாரிப்பு முறை, சமையலறை சுத்தம், உணவகத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலை போன்ற அம்சங்களையும் ஆய்வு செய்து, அவற்றை விமர்சன வீடியோக்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களை மட்டும் காட்சிப்படுத்தி உணவு விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உணவின் சுவை மற்றும் தரம் குறித்து மட்டுமே பேசாமல், தூய்மை மற்றும் சுகாதார தரநிலைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, தரம் குறைந்த உணவுகளை சிறந்ததாகக் காட்டி போலியான விமர்சனங்கள் வழங்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற உணவகங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வைரலாக்கப்படுவதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய விதிமுறைகளை மீறி, உரிமம் இல்லாத உணவகங்களில் விமர்சனங்கள் செய்யும் யூடியூபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவகங்களின் தரம், சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago