முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசு நேர்மையான மற்றும் தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார்.
தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், அரசியல் களம் இரக்கமற்றதாக இருந்தாலும், தகுதியான மற்றும் பாராட்டத்தக்க விஷயங்களை வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரப் பிரதேச அரசு, முந்தைய திமுக அரசுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர், சில திட்டங்களை ஆந்திரா பெற்றதாகவும், சில முதலீட்டு வாய்ப்புகளை தமிழ்நாட்டிடம் இழந்ததாகவும் கூறினார்.
மேலும், திமுக அரசுடன் போட்டியிட்ட அனுபவத்தில் தாங்கள் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசு மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.
தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த முதலீட்டாளரிடமும் பணம் அல்லது லஞ்சம் கேட்டதாக யாரும் புகார் கூறியதைக் கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முதலீட்டு செயல்முறைகள் மிகவும் வெளிப்படையாகவும், சுத்தமாகவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக போட்டி நிலவினாலும், நல்ல நிர்வாகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளை பாராட்ட வேண்டியது அவசியம் என்றும் நாரா லோகேஷ் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் தொழில் முதலீட்டு கொள்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் நடைமுறை குறித்து அண்டை மாநில அமைச்சர் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக பாராட்டு தெரிவித்திருப்பது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
