சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அந்த உரையில் அவர் முன்வைத்த சில கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அவற்றை வெளிப்படுத்திய விதமும், அவரது உடல் மொழியும் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் இன்னும் முழுமையாக சினிமா பாணியிலிருந்து வெளிவரவில்லை என்றும், திரைப்படங்களில் பேசப்படும் வசனங்களைப் போலவே சட்டப்பேரவையிலும் பேசியுள்ளார் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், விவசாயிகள் போராட்டம், மின்வெட்டு, மக்களின் அன்றாட சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகமாக பேசியிருக்க வேண்டிய நிலையில், அவரது உரை முழுக்க முழுக்க தவெக ஆதரவாளர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திய அதே பாணியை சட்டப்பேரவையிலும் கையாண்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, பதிலுரையின்போது முதலமைச்சர் விஜய், “ஒரு குட்டிக் கதை கூறுகிறேன்” என்று கூறி சில வரிகளை குறிப்பிட்டார். அதில், தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பவர், “உங்கள் தந்தை எங்கே?” என்று கேட்கும்போது, “இங்குதான் உங்கள் அப்பா இருப்பார்” என்று கூறப்பட்டதாகவும், ஆனால் அவர் அங்கு இல்லாத சூழலை சுட்டிக்காட்டும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது சட்டப்பேரவையில் இல்லாத நிலையை மறைமுகமாக விமர்சித்ததாகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஒரு முதலமைச்சர் சட்டப்பேரவையில் இவ்வாறான கருத்துகளை முன்வைப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் ஸ்கிரிப்டட் அவதூறுகளை அள்ளிவீசி, ஆக்டிங் பெர்பார்மன்ஸ் காட்டியிருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் நேரலை கேமராவை சினிமா கேமரா என்று நினைத்துக்கொண்டு அவர் பேசிய நிலையில், எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் சிங்கிள் டேக்கில் அது நிறைவேற வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் வசனங்களும் மட்டுமே இருந்ததாகவும், மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமடைந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் விவசாயிகள் போராடுகின்றனர் என கூறி, விவசாயிகளை கொச்சைப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு பதிவில், “குட்டிக் கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாடு முதலமைச்சர் விஜயாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறிய “குட்டிக் கதை” மற்றும் அதன்மூலம் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த விதம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தவிர்த்திருக்க வேண்டியிருந்தது என்ற கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
