சீனாவைச் சேர்ந்த 32 வயதான இளைஞருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணத்திற்காக வரன் தேடி வந்தனர். இதற்காக, அவர் தனது விவரங்களை ஒரு மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது, வடமேற்கு சீனாவைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவரின் சுயவிவரம் அவருடன் பொருந்துவதாக தெரியவந்தது.
அந்தப் பெண் தனது சுயவிவரத்தில், தனக்கு எந்தவிதமான உடல்நலக் குறையும் இல்லை, எந்தக் கடனும் இல்லை, தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த இளைஞருக்கு அந்தப் பெண் மிகவும் பிடித்துப் போனதால், அவரே தனக்கு சரியான வாழ்க்கைத் துணை என்று கருதி திருமணத்திற்கு சம்மதித்தார்.
மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் இருவரும் வீடியோ அழைப்பில் பேசினர். அப்போது, மணமகன் கேட்கும் பல கேள்விகளுக்கும், அந்தப் பெண்ணுக்குப் பதிலாக மேட்ரிமோனி நிறுவன ஊழியர்களே பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இறுதியில், இருவருக்கும் சம்மதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 36 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணத்திற்கு மணமகள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மணமகள் மட்டும் கலந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகே, அவரது உண்மையான பின்னணி ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தது.
திருமணத்திற்கு முன்பாக, அந்தப் பெண்ணின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உடல்நலச் சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று மேட்ரிமோனி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அவை வழங்கப்படாததால், மணமகன் இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, இருவரும் நேரடியாக வங்கிக்குச் சென்று விவரங்களை சரிபார்த்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் பெயரில் சுமார் 14 லட்சம் ரூபாய் கடன் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, அந்தக் கடன் தன்னுடையது அல்ல, தனது முன்னாள் காதலருடையது என்று அந்தப் பெண் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தனக்கு கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், உடல் எடையைக் குறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், ஆனால் குழந்தை பெறுவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மணமகன் அவரது மொபைல் வங்கி செயலியைச் சரிபார்த்தபோது, அதில் இருந்த பெயர், மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பெயரிலிருந்து வேறுபட்டிருந்தது. இதனால், திருமணத்திற்கு முன்பாக கூறப்பட்ட பல தகவல்களும் தவறானவை என்பது அவருக்குத் தெரியவந்தது.
இதன் காரணமாக, இனி அந்தப் பெண்ணுடன் வாழ முடியாது என்று முடிவு செய்த அவர், திருமணமான ஒன்பது நாட்களிலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார்.
ஆரம்பத்தில் விவாகரத்துக்கு சம்மதித்த அந்தப் பெண், பின்னர் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலளித்த மணமகன், தவறான தகவல்களை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறி, மேட்ரிமோனி நிறுவனத்திடம் 36 லட்சம் ரூபாய் திருமணச் செலவுக்கான இழப்பீட்டை கோரியுள்ளார்.
ஆனால், “நீங்கள் பெண்ணைப் பார்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டீர்கள். இதில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை” என்று கூறி, மேட்ரிமோனி நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை என்பதால், தவறான தகவல்கள் மற்றும் உண்மைகளை மறைப்பது போன்ற செயல்கள், குடும்ப வாழ்க்கையை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
