மாமல்லபுரம் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பாரம்பரிய முறையில் நடைபெற்ற வினோத திருமணம்; பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் – திவ்யா தம்பதியினர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மற்றும் சோழர் காலங்களில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய தமிழ் திருமண முறையை முன்மாதிரியாகக் கொண்டு, 2026-ஆம் ஆண்டில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
நவீன உலகின் தாக்கத்துக்கு மத்தியில் மறைந்து வரும் தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமக்கள் இருவரும் பண்டைய அரச வம்சத்தினரின் ராஜா – ராணி பாணியிலான ஆடைகளை அணிந்து அலங்கரிக்கப்பட்டனர்.
திருமண நாளன்று, மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலிலிருந்து திருமண மண்டபம் வரை மணமக்கள் இருவரும் பாரம்பரிய பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பல்லவ மன்னர்களின் சைவ வழிபாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில், திருமண மேடையில் சிவபெருமான் – பார்வதி உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு, அவர்களின் சாட்சியத்தில் மணமக்கள் திருமண உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்துடன் ஆடம்பரமான திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், பண்டைய தமிழ் மரபுகளை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற இந்தத் திருமணம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. திருமணக் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இதுகுறித்து மணமகன் ஆகாஷ் மற்றும் மணமகள் திவ்யா கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் சிவனடியார் தொண்டில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாக்கும் நோக்கில் சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட திருமண முறையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளோம்.
தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் மேலும் வளர வேண்டும் என்பதற்காகவும், பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற தமிழ் முறைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அனைவரும் நமது பண்பாட்டையும் மொழியையும் போற்றும் வகையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவபக்திப் பாடல்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மணமக்களை வாழ்த்தி, தமிழ் பண்பாட்டைப் பேணும் நோக்கில் அவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை பாராட்டினர்.
