https://republictn.com/

இதுவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த, முக்கியப் பொறுப்புகளில் வலம் வந்த பிஏ, பிஎஸ்ஓ-க்கள் மீது தற்போதைய தவெகஆட்சி நிர்வாகம் அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓரம் கட்டப்பட்ட அதிகாரிகள்
வழக்கமாக தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கோட்டையில் செல்வாக்குமிக்க குறிப்பிட்ட சில அதிகாரிகளே இந்த முக்கியப் பொறுப்புகளில் தொடர்ந்து நீடித்து வந்தனர். ஆனால், தற்போது இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிகளில் அமைச்சர்களின் பக்கத்தில் இருந்த யாரும் இனி புதிய அமைச்சர்களின் பக்கத்திலேயே இருக்கக் கூடாது என்று ஆட்சி மேலிடம் அதிரடி முடிவெடுத்து. அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய ஆளும்கட்சியின் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமே, இந்த முக்கியப் பொறுப்புகளுக்கான புதிய அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதற்கு முதலமைச்சரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, ஒரு சில அமைச்சர்களுக்கு ஏற்கனவே புதிய பிஏ பிஎஸ்ஓக்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கான நியமனப் பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

வாய்ப்பு தேடும் பழைய அதிகாரிகள்
ஆட்சி மேலிடத்தின் இந்த அதிரடித் திருப்பத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பழைய பிஏ, பிஎஸ்ஓக்கள், எப்படியாவது தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா? என்ற ஆதங்கத்தில் ஆளும்கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பரிந்துரை கேட்டு வருகிறார்கள்.

ஆனாலும், இந்த விஷயத்தில் முதலமைச்சர் மிகவும் கறாரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. “உங்க யாரையும் பவர் சென்டருக்கு பக்கத்துல விட முடியாது. இங்க வந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்று முதலமைச்சர் தரப்பில் இருந்து மிகக் காட்டமாகவே அவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக நிர்வாக அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், பழைய அதிகார மையங்களை உடைக்கவும் ஆளும் தரப்பு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago