https://republictn.com/

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் தோல்வி குறித்த தீவிரமான விவாதங்களும், மறுசீரமைப்பு ஆலோசனைகளும் தற்பொழுது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோல்விக்கான காரணங்கள் குறித்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக விலாவாரியாக ஆலோசித்துள்ளார்.

இந்நிலையில் சூழலில், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலை, கட்சியின் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சி மீண்டும் எழுச்சி பெற செய்ய வேண்டிய அதிரடி மாற்றங்கள் குறித்து வழக்கறிஞர் சேலம் மணிகண்டன் கூறுகையில், ”காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தத் தோல்வி ஒரு கடினமான தோல்வி என்பதை ஒப்புக்கொண்டு, அதற்குப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். மேலும், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பிரச்சார உத்திகள் சரியாக இருந்தபோதிலும், நேற்று வரை நடிகராக இருந்து இன்று அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு ‘ஜென் சி’ எனப்படும் இளைய தலைமுறை, பெண்கள் மத்தியில் கிடைத்த அசாத்திய வரவேற்பை அதிமுக கணிக்கத் தவறிவிட்டது என்பதை இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரட்டை விரலைக் காட்டும் ‘பாரம்பரிய அரசியல்’ காலம் இனி செல்லாது என்பதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கட்டமைப்பைக் கொண்டு வர இபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முயன்றார். ஆனால் கட்சியின் சீனியர்களான சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் தங்களது ஆதிக்கம் குறைந்துவிடும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தம்பிதுரை, கே.பி. முனுசாமி போன்ற தலைவர்கள் காலம் காலமாகப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு பெஞ்ச் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ‘ஆலமரங்களை’ வெட்டி வீழ்த்தினால் ஒழிய, புதிய செடிகளான இளைஞர்கள் அதிமுகவிற்குள் வளர முடியாது. 35 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஒன்றிய, மாநில அளவிலான பொறுப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக அரசியல் களம் தற்பொழுது வேகமாக மாறி வருகிறது. ஒருபுறம் அசாத்திய வேகத்தில் வளர்ந்து வரும் தவெக தலைவர் விஜய், மறுபுறம் அவரை விட 10 வயது இளையவரான, ஓபிசி அரசியலையும் டிஜிட்டல் உத்திகளையும் கையில் எடுத்து ஓடும் பாஜகவின் அண்ணாமலை என இரு ‘இளங்குதிரைகள்’ களத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

அண்ணாமலை அண்மையில் குறிப்பிட்டது போல, இன்னும் 10 ஆண்டுகளில் மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களும், நாளிதழ்களும் முழுமையாக மறைந்து மொபைல், டிஜிட்டல் தளம் மட்டுமே அரசியலைத் தீர்மானிக்கும். ஆனால், அதிமுகவோ தற்பொழுது ‘போர்வால்’ என்ற நாளிதழை ஆரம்பித்து பழைய பாணியிலேயே சென்று கொண்டிருக்கிறது, இது மிகப்பெரிய ஜெனரேஷன் கேப்.

தனிப்பட்ட தகுதி, நிர்வாகத் திறனில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது நடிகர் விஜய் ஆகிய இருவரையும் விட, அடிமட்டக் தொண்டனாக இருந்து வந்து தமிழகத்தை வழிநடத்திய எடப்பாடி பழனிசாமி பல மடங்கு தகுதியானவர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதிமுகவின் அசைக்க முடியாத ஒற்றைத் தலைமை இபிஎஸ் தான். ஆனால், ‘தலை’ எடப்பாடியாக இருந்தாலும், ஒட்டுமொத்த ‘உடலையும்’ (கட்சியின் முழு கட்டமைப்பு, ஐடி விங், புதிய முகங்கள்) டிஜிட்டல் மயமாக்கி மாற்றியமைக்க வேண்டும்.

அதிமுக தற்பொழுது கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், உடனடியாக ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்ய வேண்டும். அதற்கு, தற்போதைய தேர்தலில் இபிஎஸ்-உடன் சுமுகமாக ஒத்துழைப்பு தந்த டிடிவி தினகரனை உடனடியாக அதிமுகவிற்குள் கொண்டு வந்து, அவருக்குத் ‘துணைப் பொதுச்செயலாளர்’ போன்ற முக்கியப் பொறுப்பை வழங்க வேண்டும். இபிஎஸ்-க்கு அடுத்தபடியான ஒரு வலுவான இளைய முகத்தை இப்போதே தொண்டர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

தேசிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்ட ஒரு மிக முக்கிய சாமானியர்களுக்கான திராவிடக் கட்சி அதிமுக. இக்கட்சி அழிந்து போவது தமிழகத்திற்கு நல்லதல்ல. எனவே, சும்மா பேப்பர் படித்துக்கொண்டும், போஸ்டர் ஒட்டிக்கொண்டும் இருக்கும் பழைய பாணியைக் கைவிட்டு, அண்ணாமலை மற்றும் விஜய் பாணியிலான டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ‘வார் ரூம்’ உத்திகளை அதிமுக முழுமையாகக் கையில் எடுக்க வேண்டும். உதிர்ந்து போகும் பழைய தலைவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், புதிய இளைஞர் பட்டாளத்தை இபிஎஸ் முன்னிறுத்தினால் மட்டுமே வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதிமுகவினால் உயிர் பிழைத்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 hours ago at 4 hours ago