தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோட்டையிலும் தற்போது ‘பயிர்க்கடன் தள்ளுபடி’ குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில், ₹50,000 வரை கடன் வாங்கியவர்களுக்கு முழு தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு சதவீத அடிப்படையிலும் கடன் தள்ளுபடி செய்து அண்மையில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த அறிவிப்பானது தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இந்த அறிவிப்பு தங்களுக்குப் போதுமானதாக இல்லை எனக் கூறி பல்வேறு விவசாய சங்கங்களும் இணைந்து இன்னும் கூடுதல் தள்ளுபடி வேண்டி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அரசின் அடுத்தகட்ட வியூகம்
கூடவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மிகப்பெரிய ஆயுதமாக எடுத்து அரசுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆளும்கட்சிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை முன்கூட்டியே முறியடிக்கும் விதமாக, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளுக்குக் கூடுதலாகப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட அரசு தற்பொழுது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
இதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் கோப்பு தயாரிப்புகள் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளுடன் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
