ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களுக்கு இடையில் எங்கும் தரையிறங்காமல் நேரடியாக (Non-stop) பறக்கும் உலகின் மிக நீண்டதூர விமான சேவையை அறிமுகப்படுத்த ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய சேவை சுமார் 17,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து, 20 முதல் 22 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் மிக நீண்ட தூர வணிக விமான சேவையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கும் சிங்கப்பூர்–நியூயார்க் விமான சேவை உள்ளது. சுமார் 15,300 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 18 மணி நேரத்தில் கடக்கும் இந்த சேவை, புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அதன் சாதனை முறியடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நீண்ட நேரப் பயணத்திற்காக ஏர்பஸ் நிறுவனத்தின் A350-1000ULR (Ultra Long Range) வகை விமானத்தில் கூடுதலாக சுமார் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரத்யேக எரிபொருள் டேங்க் (Rear Centre Tank) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட தூரப் பயணம் இடையூறு இல்லாமல் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண A350 விமானங்களில் 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த அல்ட்ரா லாங் ரேஞ்ச் விமானத்தில் பயணிகளின் உடல்நலம் மற்றும் சௌகரியத்தை கருத்தில் கொண்டு 238 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்படவுள்ளன.
மேலும், இவ்வளவு நீண்ட பயணத்தில் பயணிகள் அவ்வப்போது எழுந்து நடக்கவும், உடல் தசைகளை நீட்டி மடக்கவும் (Stretching) விமானத்தின் நடுப்பகுதியில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்த திட்டத்திற்கான சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் (Certification process) நடைபெற்று வருகின்றன. இது அடுத்த சில மாதங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்பஸ் நிறுவனம் தனது முதல் A350-1000ULR விமானத்தை 2027 ஏப்ரல் மாதத்தில் குவாண்டாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த உலகின் மிக நீண்டதூர விமான சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
