Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பசுமாடுகளின் நோயைக் குணப்படுத்த கஞ்சா செடி வளர்த்ததாக டிராக்டர் ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 32 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியதம்பிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), டிராக்டர் ஓட்டுனர். இவர் தனது வீட்டில் 5 பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், ரமேஷின் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக தருமபுரி போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் தருமபுரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது, குறிப்பிட்ட அந்தப் பகுதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து அப்பகுதிக்குட்பட்ட பாரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

தகவலறிந்து, பாரூர் காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரமேஷின் வீட்டின் பின்புறத்தில் 32 கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்தப் பசுமையான கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்ததோடு, ரமேஷையும் கைது செய்தனர்.

இதையும் படியுங்க  நொடிப்பொழுதில் எடுத்த முடிவு… கல்லூரி மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் - நடத்துநர்!

கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒரு விசித்திரமான விளக்கத்தை அளித்துள்ளார். போலீசாரிடம் அவர் கூறுகையில், “இது கஞ்சா செடி என்றே எனக்குத் தெரியாது. எனது பசுமாடுகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இந்தச் செடியின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து கொடுத்தால் நோய் குணமாகிவிடுகிறது. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்தச் செடிகளை நான் வளர்த்துப் பராமரித்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago