அரை நூற்றாண்டு கால சாதி, மத அரசியலை நாம் ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்திருக்கிறோம் – திருச்சி கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், திருச்சி எம்பி துரை வைகோ மற்றும் அமைச்சர்கள் தவெக முக்கிய நிர்வாகிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், தாம் கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட விமான நிலையம் வயர்லெஸ் சாலை கேகே நகர், டிவிஎஸ் டோல்கேட், சஞ்சீவி நகர், ஓயாமரி சாலை என சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றவாறு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மாலை 4.15 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் கூட்டத்திடலில் குழுமியிருந்த இளைஞர் இளைஞிகள் தவெக துண்டை சுற்றி ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் , ரமேஷ் மற்றும் வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன், உள்ளிட்டோர் விஜய்யை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் என்னுடைய நன்றிகளும். குறிப்பாகத் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் என்னுடைய ஸ்பெஷல் வணக்கமும் ஸ்பெஷல் நன்றிகளும். இதனை நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இப்போது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ என்று தான் சொல்லுவார்கள். ஆனால் அது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு மட்டும்தான் தான் அப்படி.
என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு எப்படி திருச்சி ஒரு இதயம் மாதிரியோ அந்த மாதிரி என்னுடைய இதயத்துக்குத் திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் ரொம்ப ரொம்ப ரொம்ப நெருக்கம் தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. ஆறு மாசம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்து அரை மணி நேரத்திலே ஆரம்பித்துவிட்டார்கள். பாவம் ஒரு கல்யாண வீட்டில் எல்லாம் போய் புலம்பிட்டு இருக்கிறார்கள். நான் சொன்னதெல்லாம் நடக்கிறதா?. ஒருவர் விட்டு ஒருவராக எல்லா புலம்பலும் உள்ளது.
அதே மாதிரி இத்தனை வருடமாக மாத்தி மாத்தி உங்களை ஏமாற்றிக்கொண்டு இருந்த இந்த இரண்டு பேரையும் வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டு உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜய்யை, உங்கள் அண்ணனை உங்கள் தம்பியை முதல் அமைச்சராக இல்லை முதல் சேவகனாக ஆக்கி இருக்கிறீர்கள். தலை வணங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும் அத்தனை இயக்கத்தின் தலைவர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நாம் எப்போதுமே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தலில் 1977 தேர்தலை விட அதிகமான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் கோட், சூட் அணிவதைக் கூட சிலர் விமர்சிக்கிறார்கள்; நான் என்ன கலர் கலராகவா கோட் அணிந்து கொள்கிறேன்? நம்முடைய தூய்மையான மனதைப் போல கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டே நிறங்களில்தான் நான் ஆடை அணிகிறேன். இந்த தமிழ்நாட்டின் முதன்மைச் சேவகன் நான் மட்டுமே. தமிழக அரசியல் களத்தில் இப்போது இருவருக்கு இடையில் மட்டும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஒன்று தமிழக வெற்றிக் கழகம், மற்றொன்று திமுக. தற்போது திமுக நமக்குச் செய்வது எல்லாமே நன்மைக்கே என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில், 2K கிட்ஸ் எனப்படும் ஜென்ஸி (Gen Z) தலைமுறையைக் கவர்வதற்காக திமுகவினர் இப்போது தொடர்ந்து பல காமெடிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருபோதும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மனதார நினைத்தவர் மு.க.ஸ்டாலின். நம்மைப் பார்த்து ‘தற்குறி, தற்குறி’ என்று கேலி செய்தவர்கள்தான், இப்போது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் வாழ்க்கையையும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு வாக்களித்தால் மக்கள் நல்லவர்களா? அதுவே எங்களுக்கு வாக்களித்தால் தற்குறிகளா? முன்பு வரை எங்களை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது நாங்கள் செய்யும் சாதனைகளைப் பார்த்து நியூஸ் சேனல்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய பேரியக்கமான திமுக, இன்று இந்த அளவுக்குக் கீழிறங்கிப் போவதற்குக் யார் காரணம்? நீங்களும் உங்கள் குடும்பம் தான் காரணம்.
நீங்கள் ஒட்டுமொத்த மக்களைத் தவறாகப் பேசினால், இந்த விஜய் கண்டிப்பாக சும்மா இருக்க மாட்டான்; மக்கள் சார்பாகத் தடுத்து நிறுத்தி உரிய கேள்விகளைக் கேட்பான். நம்முடைய சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் இப்போது நேரடியாகப் பார்க்கும் வகையில் வெளிப்படையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம், அதில் ஏற்கெனவே இருந்த 100 யூனிட் திமுக கொடுத்தது இல்லை, ஜெயலலிதா கொடுத்தது. மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் டாஸ்மாக்கை மூடினோம். முடிந்த அளவு விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி செய்துள்ளேன். நீங்கள்தான் நிதி சம்பந்தமான எல்லா கதவுகளையும் மூடி வைத்துவிட்டு அல்லவா சென்றுள்ளீர்கள். அதனை சரிசெய்ய வேண்டாமா?
நான் பொய் சொல்லி ஏமாற்ற அரசியலுக்கு வரவில்லை. உங்கள் கூட நிற்கவே வந்துள்ளேன். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். சட்டம் – ஒழுங்கு சரியில்லை என புலம்புகிறீர்கள். உங்கள் மாடல் அரசில் எல்லா ஊரிலும், தெருவிலும் போதைபொருள் கலாச்சாரம் பரவியுள்ளது. அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்திருந்தால், பெண்களுக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்குமா?. எல்லாவற்றையும் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். என்ன பழி போட்டாலும், மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவேன். அதற்காகவே நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளேன். சிங்கப்பெண் உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என் மீது என்ன பழிபோட்டாலும், விஜய் மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன்.
