என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களே, உங்களுக்கு என்னுடைய சிறப்பு வணக்கங்களும் சிறப்பு நன்றிகளும்.
நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், தற்போது என்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்று கூறுவார்கள். அது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி மட்டுமே. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டிற்கு திருச்சி எப்படியோ ஒரு இதயம் போன்றதோ, அதேபோல் என் இதயத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மிகவும் நெருக்கமானவர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நாம் ஆட்சிக்கு வந்து சில வாரங்கள்கூட ஆகவில்லை. “ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம்” என்று கூறியவர்கள், ஆறு நாட்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள். திருமண வீடுகளுக்குச் சென்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் கூறியவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கிறதா என்று பார்த்து புலம்புகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக உங்களை மாறி மாறி ஏமாற்றிக் கொண்டிருந்த இரு கட்சிகளையும் நீங்கள் புறக்கணித்து, உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜயை, உங்கள் அண்ணனை, உங்கள் தம்பியை முதலமைச்சராக அல்ல, முதல் சேவகராக மாற்றியிருக்கிறீர்கள். இதற்காக ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைவணங்கி என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து இயக்கங்களுக்கும், அந்த இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலர் கூறினார்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதல் தேர்தலில்கூட இவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கவில்லை என்று. நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவு மிகப் பெரியது. நான் என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடவில்லை. எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.தான். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் காட்டிய பாதையில் அன்போடு உழைக்க வந்த உங்கள் விஜய் அவ்வளவுதான்.
1977-இல் நீங்கள் போடாத வாக்குகளை 2026-இல் போட்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை. இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் உங்கள் முழு ஆதரவையும் என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.
ஏனெனில் நீங்கள் அமைத்த இந்த ஆட்சியின் நன்மைகளை நீங்கள் கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குள் வலுவாக இருக்கிறது.
யார் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களைப் பற்றி கிண்டலும் கேலியும் செய்வது வழக்கம்தான். நம்மைப் பற்றியும், நம் அரசியலைப் பற்றியும், நம் பேச்சைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் என் தரப்பிலிருந்து ஒரு வேண்டுகோள். தயவுசெய்து நிறுத்தாதீர்கள். தொடர்ந்து பேசுங்கள். நீங்கள் தான் என்னுடைய ஆற்றலின் மூலாதாரம். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் மக்களுக்கு தேவையான நல்லவற்றைச் செய்துகொண்டே இருப்பேன்.
இப்போது நான் அணியும் கருப்பு-வெள்ளை உடை பற்றியும் பலர் பேசுகிறார்கள். “ஏன் கோட், சூட் அணிகிறார்?” என்று கேட்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டுமே கோட், சூட் அணிய வேண்டுமா? அப்படி எதுவும் இல்லை.
நான் பல நிறங்களில் வரவில்லை. இரண்டு நிறங்களில் மட்டுமே வருகிறேன். நம் மனங்களைப் போலவே கருப்பும் வெள்ளையும். எல்லா விஷயங்களிலும் கருப்பு-வெள்ளையாக, வெளிப்படையாக இருக்கும் விஜயை காட்டுவதற்காகத்தான் அந்த நிறத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். அந்த கருப்பு நிறம் எதைக் குறிக்கிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
நான் நீண்ட நேரம் பேசும் பழக்கம் கொண்டவன் அல்ல. அதிகபட்சம் இருபது நிமிடங்கள்தான் பெரும்பாலான கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.
இப்போது மக்கள் என்னிடம் சொல்வது என்னவென்றால், “விஜய், நீ எங்களுக்காக வந்திருக்கிற வேலையை மட்டும் பார். உன்னைப் பற்றி பேசுபவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்பதுதான்.
ஆனால் எனக்கு அரசியல் எதிரிகள் இல்லையா என்று கேட்டால், இல்லை என்று சொல்ல மாட்டேன். அரசியல் ரீதியாக போட்டி இரண்டு பேருக்கிடையேதான் உள்ளது. ஒன்று தமிழக வெற்றிக் கழகம், மற்றொன்று திமுக.
தேர்தலுக்கு முன்பும் சிலருக்கு வேலை இல்லை. தேர்தலுக்குப் பிறகும் வேலை இல்லை. ஆனால் திமுகவும் மற்ற சிலரும் ஒன்றிணைந்து இந்த விஜயின் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று முயற்சி செய்தார்கள். கடைசி ஐந்து நாட்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்து நாமே ஆச்சரியப்பட்டோம்.
ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இப்போது கூறுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்கும் இந்த விஜயா அல்லது இந்த ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் தானா மக்களின் ஆதரவைப் பெறுவார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
திமுக எவ்வளவு தடுத்தாலும், எதிர்த்தாலும், அவமானப்படுத்த முயன்றாலும், அவை அனைத்தும் நமக்கே நன்மையாக மாறிவிட்டன.
இன்று ஒரு முக்கியமான மாற்றம் தமிழகத்தில் நிகழ்கிறது. இளைஞர்களும் பெண்களும் அரசியலை கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது, யார் என்ன பேசுகிறார்கள் என்பதை உன்னிப்பாகப் பார்க்கிறார்கள்.
இதில் நமக்கு பெருமைதான். அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
சிலர் மக்களை “தற்குறி” என்று விமர்சித்தார்கள். ஆனால் அதே மக்கள் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார்கள்.
மக்களை மதிக்காமல், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் செய்ய முடியாது. மக்கள் ஒருவருக்கு வாக்களித்தால் அவர்கள் நல்லவர்கள்; வேறொருவருக்கு வாக்களித்தால் அவர்கள் கெட்டவர்கள் என்று கூற முடியாது.
மக்களைத் தவறாகப் பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான். அமைதியாக இருக்க மாட்டான்.
இந்த விஜயும் தமிழக மக்களும் வேறு வேறு அல்ல. தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதியாக நான் இருப்பேன். இது இன்றும் உண்மை, நாளையும் உண்மை.
மக்களுக்கும் நமக்கும் இடையிலான இந்த உறவை எந்த சதியும், எந்த சூழ்ச்சியும் உடைக்க முடியாது.
நான் எதிர்க்கட்சிகளிடம் கூறுவது ஒன்றுதான். மக்களின் மனதை வெல்ல முயற்சி செய்யுங்கள். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுங்கள்.
கடந்த ஒரு மாதத்தில் நாம் எடுத்த சில நடவடிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
200 யூனிட் வரை இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பாக முடிந்த அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம்.
சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பலர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பரவியதை தடுக்க தவறியவர்கள் இன்று கேள்வி கேட்கிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் காவல் படை” அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை கிடைக்க காவல்துறை மற்றும் சட்ட அமைப்புகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எந்த குற்றச்சாட்டுகளும் வந்தாலும், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து காட்டுவோம்.
சிலர் “அவர்கள் ஆட்சியில் இல்லை, ஏன் அவர்களை குறை கூறுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்த தவறுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் நமது கடமையல்லவா? மக்களுக்காக இவ்வளவு வேலை செய்தாலும், அதை மறைத்து வைத்து வேறு கதைகளை பரப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மை வெல்லும்.
நாம் சாதி அரசியலை உடைத்திருக்கிறோம். மத அரசியலை உடைத்திருக்கிறோம். பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலை உடைத்திருக்கிறோம். நாம் எதைச் செய்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் செய்வோம்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும். மதச்சார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை.
மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள், சமூக நீதி, சமத்துவ நீதி ஆகியவற்றில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களே, தமிழகத்தின் 234 தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். எந்தக் கட்சி வென்றிருந்தாலும் அது நமது மக்களின் தொகுதி.
எனக்கு பெரம்பூரும் திருச்சி கிழக்கும் இரண்டு கண்களைப் போன்றவை. அதிலும் திருச்சி கிழக்கு எனக்கு மிகவும் அன்பானது.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை, உங்களிலேயே ஒருவரை வேட்பாளராக நிறுத்தப் போகிறோம். நீங்கள் இந்த விஜயை ஆதரித்து வெற்றி பெறச் செய்ததுபோல, அந்த வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நான் உங்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை உருவாக்க முயற்சிப்பேன். அது ஒரே நாளில் நடக்காது. அது மாயாஜாலம் அல்ல. ஆனால் ஒரு நாள் அதை நிச்சயமாக சாதிப்போம்.
எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் இல்லை. மக்களுக்காக உழைப்பதைத்தவிர. என் கடன் இனி என் மக்களுக்குப் பணியாற்றுவதுதான். மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கும், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
