Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக வெற்றிக் கழக அரசின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய விளக்கங்களை அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சியில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டம் இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், அது எப்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, விவசாயக் கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் மாதந்தோறும் வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மற்றும் குறிப்பிட்ட நுகர்வு வரம்புக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுகுறித்தும் முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  மாறாத திமுக விசுவாசம்..! டம்மியாக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்..! முன்பே சொன்ன #Republic தமிழ்நாடு..!

இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

மாலை 4.15 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் சென்னை இருந்து திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், வாகன அணிவகுப்புடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி புறப்பட்டார்.

அவர் சென்ற வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று கைகாட்டி வரவேற்றனர். பல இடங்களில் அது ரோட்ஷோ போன்ற சூழலை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற பிறகு முதல் முறையாக பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். தேர்தலில் ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "வரிக்கும் தேர்தலுக்கும் 'ஒரே நாடு'… எங்க தண்ணீருக்கு மட்டும் ஏன் 'தனிச் சட்டம்'?!

திருச்சி கிழக்கு மற்றும் மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விஜய், சட்டப்படி இரண்டு தொகுதிகளிலும் உறுப்பினராக தொடர முடியாத காரணத்தால் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த முடிவுக்கான காரணம் குறித்தும், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தொடர்பாகவும் அவர் தனது உரையில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தாலும், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மக்களிடம் நேரடியாக உரையாற்றும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் அவரது பேச்சு மீது அதிக கவனம் திரும்பியுள்ளது.

குறிப்பாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொகுதி மக்களை நேரில் சந்திக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தோல்வியடைந்த பின்னரும் தனது தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான பதிலாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்க  அதிமுகவின் சோலியை முடித்த விஜய்..? திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே..! பகீர் கிளப்பும் சர்வே..!

முதலமைச்சர் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு என்பதாலும், அரசின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பாலும், இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago