இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடைவிதித்துள்ளதால், விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள், ஜப்பான் நாட்டின் சுகாதார விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை எனக் கூறி, அந்நாட்டு அரசு இந்த தடையை விதித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் அனைத்து பழங்களும் “வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்” எனப்படும் ஆவி வெப்ப சுத்திகரிப்பு முறையின் மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது ஜப்பான் பின்பற்றும் முக்கிய விதிமுறையாகும்.
இந்த சுத்திகரிப்பு பணிகளை, ஜப்பான் நாட்டு அதிகாரிகள் நேரில் கண்காணித்து, இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட ஆலைகளில், இந்த சுத்திகரிப்பு முறைக்கான கட்டமைப்புகள் முறையாக செயல்படவில்லை என ஜப்பான் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் முழுமையான தடைவிதித்துள்ளது.
ஜப்பானின் இந்த முடிவால், மாம்பழ விவசாயிகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
