கர்நாடக மாநிலம் மைசூரு அருகே முன்னாள் ஐடி ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டத்தின் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த 43 வயதான ரோஷன் பாலகிருஷ்ணா, ஐடி துறையில் பணியாற்றி வந்தார். விவசாயத்தின் மீது இருந்த ஆழ்ந்த ஆர்வம் காரணமாக, நண்பருடன் இணைந்து தனது ஐடி பணியை ராஜினாமா செய்து, மைசூரு அருகே நிலம் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
மேலும், நவீன விவசாய உபகரணங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை மனைவி மற்றும் மகனுடன் மைசூருவின் யெல்வாலா பகுதி அருகே உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தை பார்வையிட ரோஷன் சென்றுள்ளார். அப்போது திடீரென புயலுடன் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த மாமரத்தில் மாம்பழம் பறிக்க முயன்றபோது, திடீரென மின்னல் நேரடியாக தாக்கியதில் ரோஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்க நினைத்த முன்னாள் ஐடி ஊழியர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.4 லட்சமும், தேசிய பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
