அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் இசக்கி சுப்பையா சமர்ப்பித்தார். அந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிமுகவை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
