தமிழகத்தில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கான ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் குறு, சிறு மற்றும் பெரு விவசாயிகள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடன் இருந்தால் 50% தள்ளுபடி, அதாவது 25,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் தொகை அதிகரிக்கும் அளவிற்கு ஏற்ப தள்ளுபடி சதவீதம் மாறுபடும் வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்றிருந்தால், குறு, சிறு, பெரு என எந்த வகை விவசாயியாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிர்கடன் தள்ளுபடி திட்டம் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,22,255 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு 2,044 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை வரவிருக்கும் சாகுபடி பருவத்திற்கு விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
