https://republictn.com/

திருச்சியில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவியின் உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு – கலைச்செல்வி தம்பதியரின் மகள் சீதாலட்சுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் பயின்று வந்தார்.

இந்நிலையில், அவருக்கு மூக்குக்கு கீழ் சதை வளர்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிக அளவில் மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மற்றும் செவிலியர் மாணவிகள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தெற்கு துணை ஆணையர் சிருஷ்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago