https://republictn.com/

தென் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக, பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இல்லாத வகையில், தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஆனந்தின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திலேயே மாற்றுக் கட்சியினரை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமிழக அரசின் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஆனந்தின் அலுவலகம், முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு தினமும் நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வரும் நிலையில், தற்போது அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு வந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக மாநில அம்மா பேரவை பொருளாளர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 பேர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

அதேபோல், அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சிவராஜ், அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயதேவி உள்ளிட்ட தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அலுவலகங்களில் இதுவரை அலுவல் சார்ந்த கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக மாற்றுக் கட்சியினரை இணைக்கும் அரசியல் நிகழ்வு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் ஆனந்தின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த இணைப்பு நிகழ்வுகள், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago