https://republictn.com/

கேரளாவில் துபாயை மையமாகக் கொண்டு இயங்கி வந்த சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கொச்சி சிட்டி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடலிங் மற்றும் பியூட்டி பார்லர் வேலைவாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களை துபாய்க்கு கடத்தி சென்று, போதைப்பொருள் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் 56 வயதான சிந்து. குருவாயூரைச் சேர்ந்த இவர், கொச்சி ஆலுவாவில் வசித்து வந்துள்ளார். இந்த கடத்தல் கும்பலின் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்ட சிந்து, கொச்சியில் உள்ள மரடு பகுதியில் பிளாட் எடுத்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளார்.

தன் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்ததை அறிந்த சிந்து, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் மும்பை சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது இமிக்ரேஷன் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி கொச்சி மரடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது குற்றவாளியாக 23 வயதான ஆலினா ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் பொங்குவிளை பகுதியைச் சேர்ந்த இவர், பிரபல மாடலாக இருந்து சமூக ஊடகங்கள் மூலம் இளம் பெண்களை கவர்ந்து துபாய்க்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மூன்றாவது குற்றவாளியாக 24 வயதான மஞ்சிமா கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரம் பொன்னாணி பகுதியைச் சேர்ந்த இவர், அப்பாவி பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை மனமாற்றம் செய்து கடத்தலுக்கு உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுஇடங்களில் இளம் பெண்களை குறிவைத்து தொடர்பு கொண்டு, நட்பை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. துபாயில் நடைபெறும் சர்வதேச மாடலிங் மற்றும் ஃபேஷன் வொர்க்ஷாப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தருவதாக போலி விளம்பரங்கள் வெளியிட்டு, பெண்களை ஏமாற்றியுள்ளனர்.

வெளிநாட்டு வேலை, சொகுசு வாழ்க்கை, அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகளை நம்பி பல இளம் பெண்கள் இந்த கும்பலின் வலையில் சிக்கியுள்ளனர். சுற்றுலா விசா மூலம் அவர்கள் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

துபாயை அடைந்ததும், பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களின் பாஸ்போர்ட், மொபைல் போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் உணவு மற்றும் குளிர்பானங்களில் மயக்க மருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கலந்து கொடுத்து, சுயநினைவை இழந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி, வெளியில் தெரிவித்தால் குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவோம் என அச்சுறுத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த கும்பலின் வலையில் குறைந்தது எட்டு கேரள மாடல் அழகிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதில், போர்ட் கொச்சியை சேர்ந்த ஒரு இளம் மாடல், விசா காலம் முடிந்த பிறகும் துபாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிலரின் உதவியுடன் தப்பித்து கேரளா வந்து, மரடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி தீவிர விசாரணை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் துணை கமிஷனர் அஸ்வதி ஜிஜி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு மூன்று பேரை கைது செய்துள்ளது.

விசாரணையில், இந்த கும்பலுக்கு கேரளா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை இணைக்கும் பெரிய சர்வதேச நெட்வொர்க் இருப்பது உறுதியாகியுள்ளது. துபாயில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை பிடிக்க சர்வதேச போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை பயன்படுத்தி தங்கம் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களிலும் இந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் தாதாக்கள் அல்லது ரவுடி கும்பல்களின் தொடர்பு இருந்ததா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த கும்பலின் வலையில் மேலும் பல பெண்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கொச்சி சிட்டி போலீசார் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகே கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மற்றும் முழு பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago