தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே தற்போது தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஒன்று ஆளும் கட்சி தவெக, மற்றொன்று பாட்டாளி மக்கள் கட்சி. இன்னும் சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருந்தால் முழுமையான பலம் கிடைத்திருக்கும்.
ஆனாலும், நான்கு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருப்பது முக்கியமானதாகும். இந்த நான்கு உறுப்பினர்கள், 40 உறுப்பினர்களுக்கு சமமான பலத்தைக் கொண்ட சூழல் உருவாகியுள்ளது.
விஜய் குறித்தும் அவர் கூறியதாவது, இது ஒரு சுனாமி அல்லது பேரலை போன்ற பெரும் மாற்றம் அல்ல. தவெக-க்கு சுமார் 160 முதல் 170 எம்.எல்.ஏக்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 108 இடங்களே கிடைத்துள்ளன; பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் என்பது ஒரு செயல்முறை மட்டுமே. ஒரு கட்சியின் வெற்றியை மட்டும் வைத்து அதன் நிலை முடிவாகாது. இதற்கு முன்பும் பின்னும் பல கட்சிகள் காணாமல் போயுள்ளன. ஆனால், நாம் எந்த அலை வந்தாலும் நிலைத்திருக்கிறோம். 1991ல் ராஜீவ் காந்தி அலை இருந்தபோதும், நாம் ஒரு தொகுதியை வென்றோம். அதேபோல், 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிரான பேரலையில் நாம் நான்கு தொகுதிகளை வென்றோம்; அதிமுக இரண்டு தொகுதிகளே வென்றது.
இவ்வாறு பல தேர்தல்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது நடைபெறும் மாற்றத்தை நான் மனதார வரவேற்கிறேன். இளைஞர்கள் அரசியல் குறித்து அதிகமாக அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இது மிக முக்கியமான முன்னேற்றம். தேர்தல் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். முன்பு அவர்களைப் பற்றி தவறான கருத்துகள் கூறப்பட்டன; ஆனால் அது சரியல்ல.
2016ல் “மாற்றம், முன்னேற்றம்” என்ற முழக்கத்துடன் நாம் பிரச்சாரம் செய்தோம். ஆனால் அப்போது வெற்றி பெற முடியவில்லை. அப்போது ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்ற பெரிய தலைவர்கள் இருந்த காலம். ஆனால் இன்று சூழல் மாறியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக நடந்த அனுபவங்கள் எளிதானவை அல்ல. அனைத்து நிர்வாகிகளும் எனக்கு உறுதுணையாக இருந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர்களின் ஆதரவே எனக்கு ஊக்கமாக இருந்தது.
அதேபோல், சில வேட்பாளர்கள் விருப்பமனு அளிக்கும் போது அதிக செலவு செய்வதாக கூறினார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இது குறித்து மனநிலை மாற்றம் அவசியம்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது உங்கள் குழந்தை போன்றது. அந்தக் குழந்தையை நீங்கள் தான் வளர்க்க வேண்டும். அதை வேறு யாரும் வளர்க்க முடியாது. அதனால், கட்சியை வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது.
