https://republictn.com/

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பங்கீடு குறித்த விவாதங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்க முடியாது என தவெக அரசு கைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் சட்டச் சிக்கல்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்கள். கட்சித் தாவல் தடைச் சட்டப்படி, அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யாமல் தவெக அமைச்சரவையில் பொறுப்பேற்பது ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி செல்லாது. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

மீண்டும் அவர்கள் இடைத்தேர்தலைச் சந்தித்து வென்றால் மட்டுமே தவெக அரசில் அமைச்சராக முடியும். இந்தச் சட்டச் சிக்கலைத் தங்களுக்குச் சாதகமான கேடயமாக தவெக அரசு முன்வைக்கிறது. இந்த விவகாரத்தின் உண்மையான அரசியல் திருப்பம் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தில்தான் உள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரிகளான கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக ஆகியவை இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஊழல் புகார்களுக்கு உள்ளான, தங்களின் கொள்கைகளுக்கு முரணான அதிமுக முன்னாள் அமைச்சர்களைத் தவெக அமைச்சரவையில் சேர்த்தால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்” என அவர்கள் மறைமுகமாக எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்திலேயே இடதுசாரிகள், விசிக-வின் ஆதரவை இழப்பது தவெக அரசின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்தாக முடியும் என்பதால், முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளார்.

விஜய்யின் அரசியல் கணக்கு
அதிமுக அதிருப்தியாளர்களை அரவணைத்துச் சென்றால், தவெக-வின் “தூய்மையான அரசியல்” என்ற பிம்பம் கெட்டுவிடும் என விஜய் கருதுகிறார். அதேநேரம், கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்குப் பணிந்தது போலக் காட்டிக் கொள்ளாமல், “சட்ட சிக்கலை” ஒரு பொதுவான காரணமாகக் காட்டி வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பைத் தற்காலிகமாக அமைதிப்படுத்த விஜய் இந்த உத்தியைக் கையாண்டுள்ளார்.

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற தவெக-வின் முடிவுக்குச் சட்ட ரீதியான காரணங்கள் ஒருபுறமிருந்தாலும், கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக-வின் அரசியல் நெருக்கடியே முக்கிய காரணம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago