கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ., கனிமொழி அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ”பொதுவாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது மூத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தங்களின் தொகுதி நிலவரங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்து நேரடியாகக் களத்திற்குச் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ விசாரித்து விபரங்களை அறிவதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்படும் ஜனநாய மரபும் நடைமுறை.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாகக் கவுண்டம்பாளையம் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, தாராளமாகத் தன் அதிகார எல்லையை மீறி ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் தனது சொந்த வீட்டிற்கே வரவழைத்துத் தொகுதி நிலவரங்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்” என குற்றம்சாட்டு எழுந்தது.
இது பொதுமக்கள், அரசியல் விமர்சகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியது. மாநில அமைச்சர்கள் கூடச் செய்யத் துணியாத இந்த அராஜகப் போக்கையும், அரசு அதிகாரிகளைத் தன் வீட்டு வாசலில் காக்க வைக்கும் தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகத்தையும் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டுக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காட்டமான கோரிக்கைகள் கோவை மாவட்ட மக்களிடையே அசுர வேகத்தில் வலுத்து வந்தன.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி, ””ஜோதிட அலுவலகத்தில் தான் அதிகாரிகளை சந்தித்தேன். வீட்டில் வைத்து அதிகாரிகளை சந்திக்கவில்லை” எனக் கூறியுள்ளார். வீடும், ஜோதிட அலுவலகமும் அவருடையது தானே. அவரது சொந்த அலுவலகத்தில் சந்தித்தாலும் தவறுதான். அவரது விளக்கம் சிறுபிள்ளைத் தனமானது” என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
