புற்றுநோய் சிகிச்சையை எளிதாக்கும் வகையில், வெறும் ஏழு நிமிடங்களில் செலுத்தக்கூடிய புதிய ஊசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோச் (Roche) நிறுவனம் தயாரித்துள்ள இந்த மருந்தின் விற்பனை பெயர் டெசென்ட்ரிக் (Tecentriq) ஆகும். ஒரு டோஸின் விலை சுமார் 3,70,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து உடலில் உள்ள PD-L1 என்ற புரதத்தை தடுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. தற்போது இந்த மருந்து நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
முன்பு நரம்பு வழியாக ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை சொட்டு மருந்தாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடைப் பகுதி வழியாக வெறும் ஏழு நிமிடங்களில் இந்த மருந்தை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என்றும், கீமோதெரபி சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த ஊசி மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
