ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து, 10-ஆம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய ஹேமந்த் (21) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி ஊடகங்களில் ஹேமந்த் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. அவர் என்கவுன்ட்டரில் உயிரிழக்கவில்லை. மாறாக, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயமடைந்து, அனந்தபூர் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி கோபிகா, ஹேமந்தின் நெருங்கிய உறவினர் ஆவார். அவர் மாணவிக்கு தாய்மாமன் முறை உறவினர் எனக் கூறப்படுகிறது. ஹேமந்த், மாணவியைக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஆனால், அவரது விருப்பத்தை ஏற்க மறுத்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிப்பதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த், மாணவியைத் தாக்கத் திட்டமிட்டு இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சனிக்கிழமை காலை, பள்ளி வகுப்பறையில் கணிதப் பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மின்சார ரம்பத்துடன் (Chainsaw) பள்ளிக்குள் நுழைந்த ஹேமந்த், நேராக வகுப்பறைக்குச் சென்று மாணவி கோபிகாவைத் தாக்கியுள்ளார். மாணவியின் முகம், கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் மின்சார ரம்பத்தால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரம்பத்தை இயக்கியபோது எழுந்த சத்தத்தைக் கேட்டு ஆசிரியர் ராஜராஜேஸ்வரி மற்றும் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில், சுமார் 2 முதல் 3 நிமிடங்களுக்குள் மாணவியை ஹேமந்த் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் ராஜராஜேஸ்வரி, பயத்தில் உறைந்துபோய் சுவரோடு சுவராகச் சாய்ந்து நின்றதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி கோபிகாவுக்கு முதலில் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தாக்குதலின்போது தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற லட்சுமி என்ற மற்றொரு மாணவிக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அவர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹேமந்த் கையில் மின்சார ரம்பத்துடன் பள்ளிக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அவரைப் பார்த்துள்ளனர். ஆனால், பள்ளியில் ஏதோ கட்டுமானப் பணி அல்லது மரம் வெட்டும் வேலை நடைபெறுவதாக அவர்கள் நினைத்துள்ளனர். இதனால், அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட ஹேமந்த், நேராக வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியைத் தாக்கியுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணையில், ஹேமந்த் இந்தத் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்தியது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்திய மின்சார ரம்பத்தை அவர் சமீபத்தில்தான் வாங்கியுள்ளார். மேலும், பள்ளி வளாகம் மற்றும் மாணவி எந்த வகுப்பறையில் அமர்ந்திருப்பார் என்பன உள்ளிட்ட விவரங்களையும் முன்கூட்டியே பள்ளிக்கு வந்து நோட்டமிட்டுச் சென்றுள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற பள்ளி வளாகத்திலேயே மின்சார ரம்பத்தின் அட்டைப் பெட்டியும் (Cover) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தாக்குதலுக்கான ஏற்பாடுகளை அவர் முன்கூட்டியே செய்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து தப்பியோடிய ஹேமந்தைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் 15 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடினர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி மாலை அனந்தபூர் மாவட்டம், ஆத்மகூர் வனப்பகுதியில் ஹேமந்த் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை அந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கள்ளு அருந்தியிருந்ததாகக் கூறப்படும் ஹேமந்த், போதையில் கத்தியுடன் போலீசாரைத் தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பியோடவும் முயன்றுள்ளார். மேலும், காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் முதலில் வானத்தை நோக்கிச் சுட்டு அவரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், ஹேமந்த் தொடர்ந்து கற்களை வீசித் தாக்கியதுடன், தப்பியோட முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஹேமந்தின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரைப் பிடித்த போலீசார், அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், ஹேமந்த் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பது தெளிவாகிறது. அவர் உயிருடன் உள்ளார்; போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் மாணவி கோபிகாவுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

