Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gingee Case

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான விவகாரம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிறுமி மாயமாகி 22 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், கிராமத்தில் தெருவிளக்குகள் முறையாக எரியாததே இந்தச் சம்பவத்திற்குச் சாதகமாக அமைந்திருக்கலாம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நவம்பர் 1, 2026 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டத்தில், இந்த விவகாரத்தை முன்வைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு, சிறுமி ஹேமலதா தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். பின்னர் வீட்டில் உறங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை திடீரென மாயமானார். அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் பணியைத் தொடங்கினர்.

மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியது. தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், நவம்பர் 1ஆம் தேதி ஆலம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறுமி மாயமான விவகாரம் முக்கிய விவாதமாக மாறியது. கிராமத்தில் நீண்ட நாட்களாகவே தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை என்றும், இரவு நேரங்களில் பல தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சம்பவத்தன்று தெருவிளக்குகள் எரிந்திருந்தால் கிராமம் வெளிச்சமாக இருந்திருக்கும் என்றும், மர்ம நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடிந்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  "செஞ்சி சிறுமி ஹேமலதாவுக்கு என்னாச்சு?.. நள்ளிரவில் பேசிய அந்த 2 மொபைல் எண்கள் யாருடையது?.

“சம்பவத்தன்று தெருவிளக்குகள் ஒழுங்காக எரிந்திருந்தால், வெளிச்சம் இருந்திருக்கும். எங்கள் குழந்தை ஹேமலதா காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. இந்த இருளைப் பயன்படுத்தித்தான் குழந்தையைக் கடத்தியிருக்கலாம்” என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுமி மாயமானதற்குச் சாதகமாக அமைந்திருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Gram Sabha

கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டபோது, மின்சாரக் கட்டணம் மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்புக்காக சுமார் 2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கிராமத்தின் பல தெருக்களில் தெருவிளக்குகள் எரியாத நிலையில், பராமரிப்புக்காக மட்டும் இவ்வளவு தொகை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டுவது எப்படி என்று கேள்வி எழுப்பினர். கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும், அப்படியிருக்கையில் இரண்டு லட்சம் ரூபாய் எதற்காகச் செலவிடப்பட்டது என்றும் ஊராட்சி செயலாளர் ஏழுமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களில் ஒருவர், “ஒரு லைட்டை எடுத்துக்கொண்டு வந்து நான்கு இடங்களில் பொருத்தக்கூட முடியாதா? ஒரு லைட்டின் விலை சுமார் 2,000 ரூபாய்தான். அதற்கான பணத்தை நாங்களே கொடுக்கிறோம். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் நாங்களே தெருவிளக்குகளைப் பொருத்தித் தருகிறோம். தெருவிளக்குகளைச் சரிசெய்ய இவ்வளவு செலவு செய்ததாகக் கணக்குக் காட்டிவிட்டு, ஒரு விளக்கைக்கூட முறையாகப் பொருத்தாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “தெருவிளக்குகள் எரிந்திருந்தால் இரவு நேரத்தில் யார் வருகிறார்கள், யார் செல்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்க முடியும். கிராமத்தில் வெளிச்சம் இருந்திருந்தால் மர்ம நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்திருக்கலாம். இந்தச் சம்பவத்துக்கு ஊராட்சி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையும் படியுங்க  "நாங்க என்ன பண்றது? எல்லாம் மேலிடத்து உத்தரவு!" - கோவில்பட்டி மின்வெட்டு ரகசிய ஆடியோவால் கதி கலங்கிய மின்வாரியம்!

கிராமத்தில் இரவு 12 மணி வரையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், தெருவிளக்குகள் எரியாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், சிறுமி மாயமான சம்பவத்துக்குப் பிறகு போலீசாரே ஊராட்சி நிர்வாகத்திடம் தெருவிளக்குகளைச் சரிசெய்யுமாறு நேரடியாகக் கேட்டுக்கொண்டதாகவும் பொதுமக்கள் கூறினர். காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தெருவிளக்குகளைச் சீரமைக்குமாறு அறிவுறுத்தியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, சிறுமி மாயமான அன்று அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடமாடியதற்கான தடயம் போலீசாருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மணிமேகலை என்ற மூதாட்டி, சம்பவத்தன்று நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் யாரோ மர்ம நபர் தனது வீட்டுக் கதவை மூன்று முறை தட்டியதாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் ஐந்து தொழிலாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரை, உள்ளூர் கோயில் பூசாரி, சிறுமிக்கு ஜாதகம் எழுதிய நபர், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டுவதில் உடனிருந்த எதிர்வீட்டு இளைஞர் உள்ளிட்ட பலரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த முக்கிய நபர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் புகைப்படங்கள் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  தமிழகத்தின் எப்ஸ்டீன்..? 84 வயதில் சிறுமிகளுடன் காமக் களியாட்டம்..! உடையாத பகீர் மர்மங்கள்..!

நள்ளிரவில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, அவர்களுக்குத் தெரியாமல் எப்படிக் கடத்தப்பட்டிருக்க முடியும் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியைக் கடத்துவதற்கு முன்பு மயக்க மருந்து தெளிக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

சிறுமி மாயமான பகுதிக்கு அருகே வனப்பகுதிகளும் மலைகளும் இருப்பதால், அப்பகுதிகளில் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினரின் உதவியுடன் ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் கிணறுகளில் தேடுதல் வேட்டை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறுமி மாயமாகி 22 நாட்களைக் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், குடும்பத்தினரும் கிராம மக்களும் பெரும் கவலையில் உள்ளனர். இந்நிலையில், தெருவிளக்குகள் பராமரிப்புக்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டும், கிராமத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடப்பது ஏன் என்ற கேள்வி கிராம சபைக் கூட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக வெடித்துள்ளது.

சிறுமி மாயமான சம்பவத்திற்கும் தெருவிளக்குகள் எரியாததற்கும் தொடர்பு இருப்பதாகப் பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சிறுமி எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago