Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gudiyatham

உங்க பர்ஸில் இருக்கும் 500 ரூபாய் நோட்டு நிஜம்தானா… ஒரு தடவை திருப்பிப் பாருங்க!”

வேலூர் மாவட்டம் முழுக்க இப்போது இதே பதற்றம்தான். டீக்கடைகளில், பஸ் ஸ்டாண்டுகளில், வாட்ஸ்அப் குரூப்களில் எல்லாம் ஒரே பேச்சு. குடியாத்தத்தில் ஒரு சாதாரண பிளிப்கார்ட் டெலிவரி பாய் காட்டிய ஒரு சந்தேகப் பார்வை, மேற்கு வங்கம் வரை வேரூன்றிக் கிடந்த ஒரு மாபியா நெட்வொர்க்கையே வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்!

தொடங்கியது அந்த 2 நோட்டுகளில்! குடியாத்தம் அடுத்த கள்ளூர் நேரு நகர். இங்கே வசிக்கும் ரபீக் அஹ்மத் (46), தரணம்பேட்டையில் ஓட்டல் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பிளிப்கார்ட்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்கிறார்.

வாசலில் வந்து நின்ற டெலிவரி ஊழியர், பார்சலை நீட்ட, பாக்கெட்டிலிருந்து 2 ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டியிருக்கிறார் ரபீக். கேஷ் ஆன் டெலிவரி.

நோட்டை வாங்கிய அந்த இளைஞரின் விரல்கள் ஒரு கணம் தயங்கியிருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான நோட்டுகளைத் தொட்டுப் பழகிய அனுபவம்… காகிதத்தின் சொரசொரப்பு இல்லை, அச்சின் நேர்த்தி இல்லை, லேசாகத் திருப்பிப் பார்த்ததில் வாட்டர்மார்க்கில் ஏதோ கோளாறு!

இதையும் படியுங்க  Retail retailer purchases could be returned or exchanged for

ஆனால், அந்த இடத்தில் அவர் சத்தம் போடவில்லை. சந்தேகத்தை முகத்தில் காட்டவில்லை. அமைதியாகப் பொருளைக் கொடுத்துவிட்டு பைக்கை எடுத்திருக்கிறார். பைக் நேராகச் சென்றது குடியாத்தம் காவல் நிலையத்துக்கு!

அவர் கொடுத்த அந்த ஒரு ரகசியத் தகவல்தான்… இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு முதல் அடி!

களத்தில் இறங்கிய தனிப்படை! தகவல் உடனடியாக வேலூர் சரக டிஐஜி மகேஷ் கவனத்துக்குப் போனது. அடுத்த சில நிமிடங்களில் மாவட்ட எஸ்.பி. சிவராமன் மேற்பார்வையில், குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முதல் வேட்டை: ரபீக் அஹ்மத்! –  அவரது ஓட்டலில், வீட்டில் தனிப்படை அதிரடி சோதனை நடத்தியபோது… போலீசாருக்கே கண்கள் விரிந்தன. கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள். மதிப்பு ரூ.50,000!

கிடுக்கிப்பிடி விசாரணையில் ரபீக் உடைந்தார். “எனக்கு ஒண்ணும் தெரியாது சார்… குடியாத்தம் தங்கம் நகர் பாரதியார் தெரு ஜூபேர் அஹ்மத் (52) கிட்டதான் வாங்கினேன்” என்று கைகாட்டினார்.

சங்கிலித் தொடராக நீண்ட கைதுகள்! – அடுத்து தூக்கப்பட்டார் ஜூபேர் அஹ்மத். அவரிடமிருந்து ரூ.20,000 கள்ளநோட்டுகள் பறிமுதல்.

ஜூபேரைத் துருவித் துருவி விசாரித்ததில் அடுத்த இரண்டு பெயர்கள் வெளியே வந்தன. ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தைச் சேர்ந்த கோபால் (47), பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் (48).

இதையும் படியுங்க  Over time, consumers have settled right into a practical tier

இருவரையும் சுற்றி வளைத்தபோது அவர்களிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கின.

ஆனால், இவர்கள் விசாரணையில்தான் போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் ஒரே குரலில் கைகாட்டியது… ஆம்பூர் எஸ்.கே.ரோடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு (65) என்ற பெரிய தலையை!

10 ஆண்டுகளுக்கு முன் சிறை சென்ற பாபு… யார் இவர்? பாபுவைப் பிடித்து விசாரித்தபோது தனிப்படையினருக்கே முதுகுத்தண்டு சில்லிட்டது. இவர் சாதாரண ஆள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர்!

சிறையில் இருந்த காலத்தில் மேற்கு வங்க கள்ளநோட்டு மாஃபியாவுடன் ஏற்பட்ட தொடர்பு, வெளியே வந்த பிறகும் தொடர்ந்திருக்கிறது. அங்கிருந்து மொத்தமாகக் கள்ளநோட்டுகளைக் கொண்டு வந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் என தமிழக எல்லையோரப் பகுதிகளில் சிறு சிறு வியாபாரிகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் மூலம் இரவோடு இரவாகப் புழக்கத்தில் விட்டிருக்கிறார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பாபுவிடமிருந்து மட்டும் ரூ.30,000 கள்ளநோட்டுகள் பறிமுதல். மொத்தம் 5 பேர் கைது. பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.1,50,000!

இதையும் படியுங்க  விடுதியில் தொடங்கிய ஆபரேஷன்.. ஏர்போர்ட்டில் முடிந்த வேட்டை! சென்னையை உலுக்கிய 'மலேசிய' கள்ளநோட்டு நெட்வொர்க்!

இன்னும் விடை தெரியாத மர்ம முடிச்சுகள்! இந்த வழக்கில் போலீசாரைத் தூங்கவிடாமல் செய்யும் கேள்விகள் ஏராளம்…

1. மேற்கு வங்கத்திலிருந்து லட்சக்கணக்கான கள்ளநோட்டுகள் எப்படி வந்தன? ரயிலிலா, பஸ்ஸிலா, காரிலா? 

2. பாபுவுக்கு சப்ளை செய்த மேற்கு வங்க கும்பல் யார்? அந்த நெட்வொர்க் எவ்வளவு பெரியது? 

3. வேலூரைத் தாண்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை வரை இந்த நோட்டுகள் பரவியுள்ளனவா?

 4. சிறு கடைகள், பெட்ரோல் பங்குகளைக் குறிவைத்து இரவு நேரங்களில் இந்த நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளனவா? 

இதுகுறித்து குடியாத்தம் போலீசார் மேற்கு வங்க காவல்துறையுடன் இணைந்து விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த டெலிவரி ஊழியரின் விழிப்புணர்வு மட்டும் இல்லாவிட்டால்… இந்தக் கள்ளநோட்டுகள் இந்நேரம் நம் பாக்கெட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கும். விரைவில் அந்த ஊழியருக்குப் பாராட்டும், வெகுமதியும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மக்களே உஷார்! 500 ரூபாய் நோட்டை வாங்கும்போது காந்தி படம், வாட்டர்மார்க், பாதுகாப்பு இழை, மை புடைப்பு அச்சு ஆகியவற்றைத் தவறாமல் சரிபாருங்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago