மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தோல்விகளிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுச்சி பெறும் என்றும், திமுக ஆட்சியின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“திமுக பல தேர்தல்களை சந்தித்த கட்சி. 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது கழகம், 1952, 1957, 1962, 1967, 1971 உள்ளிட்ட பல தேர்தல்களில் வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் திமுக பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்துள்ளது” என்று கூறினார்.
மேலும், “இங்கு பலர் சோகமாக இருப்பதை பார்க்கிறேன். ஆனால் சோகப்பட வேண்டிய அவசியமே இல்லை. இன்றும் தமிழகத்தில் நமது திட்டங்கள்தான் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சி திமுகவின் திராவிட மாடல் ஆட்சிதான். அந்த சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது” என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “நான் ஆட்சிப் பொறுப்பை இழந்தபோது, புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அதே நேரத்தில், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
இன்று அந்த திட்டங்கள் தொடரப்படுவது கண்கூடாக தெரிகிறது. அந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் தோல்வி குறித்து பேசிய மு.க. ஸ்டாலின், “சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மூலம் திட்டமிட்ட பிரசாரம் நடைபெற்றது. குழந்தைகள் மூலமாக குடும்பங்களிடம் பிரசாரம் செய்யப்பட்டது.
அந்த அரசியல் அணுகுமுறையை நாங்கள் சரியாக கணிக்கவில்லை. ஆனால் இனிமேல் அதையும் முறியடிக்கும் வகையில் திட்டங்களை தீட்டி வருகிறோம்” என்றும் கூறினார்.
