Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஸ்பெயினில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது, பின்னால் வேகமாக வந்த விரைவு ரயில் மோதியதில் 68 பயணிகள் உயிரிழந்தனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து செவில்லே நகரை நோக்கிச் சென்ற இரண்டு விரைவு ரயில்களும் ஒரே வழித்தடத்தில் பயணித்துள்ளன. அப்போது, முன்னால் சென்ற ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உர்சா நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மற்றொரு ரயில், நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் ஒரு ரயில் பெட்டி முற்றிலும் சிதைந்ததுடன், இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், தடம் புரண்டு கவிழ்ந்த ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தீவிரமாகத் தேடினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த விபத்து ஒட்டுமொத்த ஸ்பெயின் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு மன்னர் ஆறாம் பிலிப் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளில் விரைந்து செயல்பட்டவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "அம்மா" என அழைக்க... தன் கருவறையையே வரமாகக் கொடுத்த தமக்கை! மருத்துவ உலகைக் நெகிழ வைத்த பாசப் போராட்டம்!

விபத்தைத் தொடர்ந்து, மாட்ரிட் – அண்டலூசியா வழித்தடத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ரயில் பெட்டிகள் மட்டுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மற்ற பெட்டிகளில் இருந்த சுமார் 400 பயணிகள் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் உரிய எச்சரிக்கையை வழங்கத் தவறியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விசாரணை முடிவிலேயே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்பெயினில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 80 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்குப் பிறகு, நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago