முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த இடைவெளியில் தாம் மேற்கொள்ள உள்ள செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டது எனக்கும், எனது குழுவினருக்கும் இரவு பகலின்றி தொடர்ச்சியான பொறுப்பாகவே இருந்தது.
தற்போது சில வாரங்கள் அந்த பொறுப்புகளில் இருந்து விலகி, எனக்கான நேரத்தை நானே தீர்மானிக்கும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அழைப்புகளையும், உரையாற்றுவதற்கான கோரிக்கைகளையும் நேரமின்மை காரணமாக ஏற்க முடியவில்லை.
இனி அவற்றை ஏற்க முடியும். நான் அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், சொற்பொழிவுகள் வழங்கவும் வந்த அழைப்புகளுக்கு பலமுறை அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி, அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நீண்ட நாட்களாக வந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க நல்ல வாய்ப்பாக அமையும்” என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், “முன்னரே குறிப்பிட்டதுபோல், HarperCollins நிறுவனத்திற்காக நான் எழுதிவரும் புத்தகப் பணிகள் ஏற்கனவே தாமதமாகிவிட்டன. இந்த ஓய்வு நேரத்தை அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளேன்.
சமீபத்தில் நான் 60 வயதை எட்டியுள்ளதால், அன்றாட பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தி உடல்நலத்தையும் மேலும் மேம்படுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது அரசியல் பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக மதுரை மத்திய தொகுதி மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தேர்தல் வரை நான் மக்கள் பிரதிநிதியாக இருக்க மாட்டேன் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும், பொதுச்சேவையிலும் சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதிலும் எனது ஆர்வம் எப்போதும் குறையாது. புதிய ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் மீண்டும் வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், “மிகுந்த உற்சாகத்துடனும் வலிமையுடனும் மீண்டும் வாருங்கள் சார்” என ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
