தமிழக அரசியல் களத்தில் அடுத்த பெரிய அதிர்வுக்கான கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்! அதிமுகவிலிருந்து வெளியேறி தனி அணியாக வலம் வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 35-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாகப் போவதாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்புத் தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே பாஜக ஒரு எம்.எல்.ஏ-வையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை 36 ஆகிறது என்று அரசியல் நோக்கர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
எல்.முருகன் மாஸ்டர் பிளானா?
இந்தப் பரபரப்புக்கு மத்தியில், மத்திய இணை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.முருகன், அக்டோபர் 13, 2026 அன்று தனது இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்திருக்கிறார். “தமிழகத்தில் பாஜகவை அடிமட்ட அளவில் வலுப்படுத்த முழுநேர களப்பணியாற்ற விரும்புகிறேன்” என்று அவர் கூறியிருப்பது சாதாரணமானதல்ல என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் எல்.முருகனைக் களமிறக்கி, எப்படியாவது வெற்றிவாகை சூட வைக்க பாஜக தீவிர திட்டம் தீட்டுவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இவிஎம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், “இவிஎம் மெஷின் ஜிந்தாபாத்” என்ற ரீதியில் இந்த வெற்றி திட்டமிடப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. எல்.முருகன் வெற்றி பெற்றால் பாஜக அணியின் பலம் 37 ஆக உயரும் என்றும், அவரே துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 ஃபார்முலா ரெடியா?
பாஜகவின் கணக்கு இன்னும் விரிவாகவே இருக்கிறது. பாஜக (என்டிஏ) + தவெக கூட்டணி கணக்கின்படி 37 + 109 + 4 (வரவிருக்கும் இடைத்தேர்தல்) = 150 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் தவெக+ பாஜக கூட்டணியில் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைப்பதே இலக்கு என்றும், அதற்கேற்றவாறு ஆளுநர் நியமனம் கூட ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உடைப்பு?
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மொத்தம் 47 இடங்களைக் கைப்பற்றியது. அதில் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. தற்போது அதிமுகவிடம் 41 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இதில் வேலுமணி, தங்கமணி, வீரமணி, சண்முகம், அன்பழகன் உள்ளிட்ட 35 எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் தாவத் தயாராகி வருவதாகவும், இபிஎஸ்-க்கு ஆதரவாக வெறும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
41-ல் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் (35 பேர்) பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது; பதவியும் பறிபோகாது என்பதே பாஜகவின் சட்ட ஆலோசகர்களின் கணக்கு. அப்படியானால், பாஜக அணிக்கு 35+1=36 எம்.எல்.ஏக்கள் ரெடி!
விஜய்க்கு செக்?
இதேவேளையில், மீதமுள்ள 4 இடைத்தேர்தல் தொகுதிகளில் பாஜக-தவெக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம். விஜய் கட்சியோடு கூட்டணி வைத்து, 37 எம்.எல்.ஏக்கள் வரை முழு பலத்துடன் துணை முதல்வர் பதவியை பாஜக கேட்க உள்ளதாகவும் தகவல்.
விஜய் இதற்கு உடன்படவில்லை என்றால், கரூர் வழக்கு மற்றும் கொடைக்கானல் அரசு நிலம் வாங்கியது தொடர்பான வழக்குகள் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுத்து சரிகட்டப்படலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கிசுகிசுக்கின்றனர்.
