https://republictn.com/

அரசு அலுவலகம் என்றாலே நம் பொதுப்புத்தியில் சட்டென்று நினைவுக்கு வரும் சில பிம்பங்கள் உண்டு. உதிர்ந்த சுண்ணாம்புச் சுவர்கள், ஒட்டடை படிந்த மேற்கூரைகள், துருப்பிடித்த இரும்பு அலமாரிகள், தூசிகளுக்கு நடுவே திணறிக்கொண்டிருக்கும் கோப்புகள், உடைந்த நாற்காலிகள், அங்கே வேலை செய்யும் ஊழியர்களின் முகத்தில் அப்பட்டமாகத் தெரியும் சலிப்பு..! இதுதான் தொன்றுதொட்டே தமிழக அரசு அலுவலகங்களின் மாறாத இலக்கணம். காலங்கள் மாறினாலும், சம்பளங்கள் உயர்ந்தாலும், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அரசு ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்யும் சுற்றுச்சூழல் மட்டும் மாறவே மாறாது என்கிற ஒரு எழுதப்படாத சாபமே தொடர்ந்து வந்தது.

ஐடி நிறுவனங்களின் பளபளக்கும் கண்ணாடிக் கட்டிடங்களையும், அங்குள்ள சொகுசு வசதிகளையும் பார்த்துவிட்டு, “நமக்கும் இப்படி ஒரு வேலைச் சூழல் அமையாதா?” என்று ஏங்கித் தவித்த அரசு ஊழியர்கள் இங்கு லட்சக்கணக்கானோர். ஆனால், “மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஒரு தலைவனுக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தால் ஒட்டுமொத்த அமைப்பையுமே தலைகீழாக மாற்றியமைக்க முடியும்” என்பதை வார்த்தைகளால் சொல்லாமல், தனது அசாத்திய செயலால் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஐ.ஏ.எஸ்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பனகல் மாளிகையில் இயங்கி வரும் அரசு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகத்தை, பன்னாட்டு கார்ப்பரேட் ஐடி நிறுவனங்களே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான சொகுசு உலகமாக மாற்றியமைத்து, தமிழக அரசு நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் பொன்னையா ஐ.ஏ.எஸ்.

கார்ப்பரேட் நந்தவனம்
சென்னை பனகல் மாளிகையின் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகத்தின் வாசலில் இன்று கால் வைப்பவர்கள் ஒரு நிமிடம் திகைத்து, அப்படியே உறைந்து போய் விடுகிறார்கள். “நாம் தவறுதலாக ஏதாவது சர்வதேச நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் நுழைந்துவிட்டோமா?” என்று தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அங்கே பிரம்மாண்டம் கொட்டிக்கிடக்கிறது.

நாம் பகிர்ந்து ஊரகவளர்ச்சி துறை அலுவலகத்தின் தற்போதைய புகைப்படங்களை உற்றுப்பார்க்கும் அனைவருக்கும், இந்த மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் முயற்சி அப்பட்டமாகத் புரியும்.

அலுவலக வேலை செய்யும் இடங்கள் மட்டுமன்றி, ஊழியர்கள் அமர்ந்து உணவருந்தும் மாடர்ன சாப்பாட்டு அறை, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஓய்வெடுக்கும் ஓய்வறை, தேடி வரும் பொதுமக்களை அன்போடு வரவேற்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்திலான வரவேற்பறை என ஒவ்வொரு அங்குலமும் பொன்னையா ஐ.ஏ.எஸ் முயற்சியால் ஜொலிக்கிறது.

அரசுத்துறைகளில் எத்தனையோ அதிகாரிகள் வருகிறார்கள், போகிறார்கள். பல நேரங்களில், தலைமை மட்டத்தில் இருக்கும் சில உயரதிகாரிகள் தங்களது சொந்த அறையை மட்டும் சில, பல லட்சங்கள் செலவு செய்து, ஆடம்பரமாக, பவிசாக மாற்றிக் கொள்வதுண்டு. தங்களுக்குக் கீழ் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் எப்படிப்பட்ட நரகச் சூழலில் அமர்ந்து வேலை செய்தால் நமக்கென்ன? என்கிற சுயநல மனப்போக்கே பல இடங்களில் நிலவுகிறது.

ஆனால், பொன்னையா ஐ.ஏ.எஸ் இந்த இடத்தில்தான் மற்ற அனைத்து அதிகாரிகளிடம் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு, ஒரு உன்னதமான அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார். “தலைமை பொறுப்பு என்பது தனக்கான வசதிகளைத் தேடுபவது மட்டுமல்ல. தன் பின்னால் இருக்கும் ஊழியர்களுக்கும் வசதிகளை உருவாக்குபவதே” என்பதை அவர் ஆழமாக நம்பியிருக்கிறார்.

தன்னிடம் பணிபுரியும் ஒவ்வொரு டைப்பிஸ்டும், ரைட்டரும், ஒவ்வொரு அலுவலக உதவியாளரும் கூட ஒரு தரமான, கௌரவமான, நிம்மதியான வேலைச் சூழலில் பணியாற்ற வேண்டும் என்று அவர் மனதார விரும்பி இருக்கிறார். அந்தப் பரந்த உள்ளத்தின் விளைவுதான் இன்று பனகல் மாளிகையில் அரங்கேறியிருக்கும் இந்த அற்புத மாற்றம்.

உருகும் ஊழியர்கள்
பொன்னையா ஐ.ஏ.எஸின் இந்த முயற்சியில் நெஞ்சைத் தொடும், மிகவும் உருக்கமான ஒரு பின்னணி இருக்கிறது. அவர் இந்த மாற்றத்தைச் செய்து முடித்திருப்பது சாதாரணக் காலகட்டத்தில் அல்ல. தற்போதைய ஆட்சி முடியும் தருவாயில், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில்.

பொதுவாக, இப்படிப்பட்ட நேரங்களில் எந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் புதிய திட்டங்களையோ அல்லது பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மாற்றங்களையோ கையில் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், ஆட்சி மாறினால் அடுத்த சில தினங்களில் தாங்கள் வேறு துறைக்கு அதிரடியாக மாற்றப்படலாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். “நாம் இருக்கும் இடமே நிலையற்றது, நாமே இன்னும் சில நாட்களில் இங்கே இருக்கப் போவதில்லை, பிறகு ஏன் இவ்வளவு சிரமப்பட்டு, உழைத்து இந்த அலுவலகத்தை மாற்றியமைக்க வேண்டும்? நமக்கு அடுத்து வரும் அதிகாரி அல்லவா இந்த நல்ல பெயரையும் வசதியையும் அனுபவிப்பார்?” என்று சுயநலமாக யோசித்து ஒதுங்குவதுதான் அதிகாரிகளின் இயல்பு.

ஆனால், பொன்னையா ஐ.ஏ.எஸ் அப்படி யோசிக்கவில்லை. “நான் இந்தத் துறையில் இயக்குநராகத் தொடர்கிறேனோ இல்லையோ? அது முக்கியமல்ல. ஆனால், என் காலத்திற்குப் பிறகும் இந்த ஊரக வளர்ச்சித் துறையில் அமர்ந்து இரவு, பகலாக உழைக்கப் போகும் என் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தரமான சூழல் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அவர்கள் நிம்மதியாக வேலை செய்ய வேண்டும்” என்கிறார்.

பொன்னையா ஐ.ஏ.எஸின் இந்த அசாத்திய முயற்சியைப் பார்த்து, தற்போது பனகல் மாளிகைக்கு வந்து செல்லும் பொதுமக்களும், பிற அரசுத் துறை அதிகாரிகளும் வியப்பின் எல்லக்கே சென்று விடுகிறார்கள். “அரசு அலுவலகத்தையும் நினைத்தால் இப்படி கார்ப்பரேட் தரத்திற்கு மாற்ற முடியும் என்று ஒரு அதிகாரி நிரூபித்துக் காட்டியிருக்கிறாரே… இதற்கெல்லாம் வெறும் நிதி மட்டும் போதாது. அதைவிடப் பெரிய அளவிலான தொலைநோக்குப் பார்வையும், எல்லோரையும் நேசிக்கும் ஒரு உன்னதமான, நல்ல மனசும் வேண்டும்!” என்று கோட்டை வட்டாரமே அவரை பாராட்டி வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பலர், தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அலுவலகச் சூழலைப் பார்த்து, நெகிழ்ச்சியில் கண் கலங்குகிறார்கள். “எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்களைப் போன்ற கீழ்நிலை ஊழியர்களின் கௌரவத்தைப் பற்றி யோசித்த ஒரே ஒரு அதிகாரி பொன்னையா ஐ.ஏ.எஸ் அவர்கள் மட்டும்தான்!” என்று அவரை மனதார வாழ்த்துகிறார்கள்.

பொன்னையா ஐ.ஏ.எஸ் ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றம் வெறும் ஒரு துறைக்கான மாற்றம் மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாக அமைப்பிற்குமே விடுக்கப்பட்டுள்ள ஒரு ஆரோக்கியமான சவால். அரசு அலுவலகங்கள் என்றாலே சலிப்போடு பார்க்கும் பொதுமக்களின் பார்வையை மாற்றியமைத்த பெருமை இவரையே சாரும்.

ஐடி துறையின் நவீன சூழலைப் பார்த்துப் பல வருடங்களாக ஏங்கித் தவித்த அரசு ஊழியர்களின் ஏக்கம் தீர்த்த ஒரு அதிகாரியாக, தமிழக அரசு நிர்வாக வரலாற்றில் தனது பெயரை அழியாத தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளார் பொன்னையா ஐ.ஏ.எஸ். அதிகாரங்கள் வரலாம், போகலாம். பதவிகள் மாறலாம்… ஆனால், ஒரு அதிகாரியின் பரந்த உள்ளமும், அவர் தனக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு செய்துவிட்டுச் செல்லும் சேவைகள் அவர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago