https://republictn.com/

2026 தேர்தல் எண்ணிக்கை அன்று தவெக தொடர்ந்து முன்னிலையில் சென்றபோது அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. அன்று மாலை மீண்டும் ஒரு கூவத்தூர் என கூறப்பட்ட பாண்டிச்சேரி நட்சத்திர விடுதியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் புதிய எம்.எல்.ஏ-க்கள் என்பதால் தவெகவுக்கு தாவி விடுவார்கள் என்றும், தவெகவுக்கு ஆதரவு அளிக்கவே தனி அணியாக சென்றுள்ளார்கள் எனவும் பல விதமாக விமர்சனங்கள் எழுந்தது.

தேர்தல் முடிந்த மறுநாள், பாண்டிச்சேரியில் தக்கவைக்கப்பட்ட விடுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சோகத்துடன் திரும்பினர் எடப்பாடி பழனிசாமி. தற்போது 30 எம்எல்ஏ-க்களில் மெல்ல மெல்ல குறைந்து 24 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மாஜிக்களை தவிர இன்னுமும் அந்த எம்.எல்.ஏ-க்கள் அங்குதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி. இதனால் பல மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்போனது. அவர்களுக்கு பதிலாக உடனடியாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி போன்ற மாஜிக்கள் மாவட்ட அலுவலகத்திற்கு செல்ல முயன்றபோது , அதிமுகவினர் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததில் பயந்துபோன வேலுமணி தரப்பு, கட்சியை கட்டமைப்பு செய்யவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி இருக்க சொல்கிறோம் என்றும், இல்லை இல்லை அவர்தான் பொதுச்செயலாளர். ஆனால் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவே தனி அணியாக செயல்பட்டு வருகிறோம் என்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.வீரமணி, திடீரென புதிய மாவட்ட செயலாளர் பசுபதி பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ”அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவரை மீண்டும் முதல்வராக்கும் வரை புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் பயணிப்போம்” என்று பேசிவிட்டு வந்தார்.

அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ”வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம் என்றோம். ஈபிஎஸ் ஏற்கவில்லை. தவெக தரப்பில் 10 அமைச்சர் பதவி தருவதாக சொன்னார்கள். அமைச்சராக இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என ஈபிஎஸ் இடம் சொன்னோம்” என சமாளித்தார். இந்த பேட்டி குதிரை பேரத்தை ஊக்குவிப்பாதக கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மே -15 அன்று வாணியம்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி. கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி விவாதித்து எடுக்க வேண்டிய முடிவுகளைத் தன்னிச்சையாக மேற்கொண்டிருக்கிறார்.

26 மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரையும் அவர் எவ்வித விசாரணையும் இன்றி நீக்கியுள்ளார். இப்படி என்னை போன்ற முக்கியப் புள்ளிகளை எல்லாம் நீக்கிவிட்டு அவர் யாரை வைத்து, எப்படி கட்சியை நடத்தப் போகிறார்? என கேட்டவர், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாட்டைப் பின்பற்றினால் அடுத்த 5 ஆண்டுகளும் இந்த எம்.எல்.ஏ பதவியால் வாக்களித்த மக்களுக்கோ, தொண்டர்களுக்கோ எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.

எனவே, எங்களது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களைச் சந்திக்க ஏதுவாகவும், அதிமுக சார்பாகவே சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நாங்கள் ஆளுங்கட்சி அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார்

இப்படி தினம் ஒரு நிலைப்பாட்டை வீரமணி எடுப்பது எதனால்? என்று வாணியம்பாடி முத்த அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம். ”2021 தேர்தலில் தோற்றவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். பசையுள்ள பல துறைகளில் அமைச்சராக இருந்தவருக்கு மீண்டும் பதவி ஆசை வந்துவிட்டது. வீரமணி சதியால் சீட் கிடைக்காமல் போக விஜய் கட்சியில் இணைந்து எம்எல்ஏ ஆகி இருக்கும் டாக்டர்.திருப்பதி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுகவில் சீட் வழங்கி இருந்தாலும் நிச்சயமாக அவர் வெற்றி பெற்று இருப்பார். ஒருவேளை டாக்டர் திருப்பதி மந்திரி ஆனால் அவரிடம் கைகட்டி நிக்க வேண்டிய நிலை வந்துவிடுமோ என எண்ணியவர் ஆதரவு அணியில் இணைந்து விஜய் மந்திரி சபையில் மந்திரி பதவி கேட்டதாக கூறப்படுகிறது.

டாக்டர்.திருப்பதியும் மந்திரிக்கு முயற்சித்து வருகிறார். இதனை அறிந்ததாலோ என்னவோ விரக்தியான வீரமணி பதவி கிடைக்காது என தெரிந்துக் கொண்டு, இடைத்தேர்தலை தவிர்த்து எம்எல்ஏ பதவியாவது தக்க வைக்கலாமென எடப்பாடியை புகழந்து பார்த்தார். ஆனாலும், எடப்பாடி பிடி கொடுக்காததால் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். ஆனால், ஆதரவு விஜய்க்குதான் என ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருக்கிறார். பொதுச்செயலாளர் எடப்பாடியார் இந்த துரோகிகளை ஏற்றுக் கொள்ள மாட்டார். வீரமணி உள்ளிட்ட 24 பேர் தகுதி நீக்கம் செய்வது உறுதி. இடைத்தேர்தலில் வீரமணி விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினம் என்றவர்கள்,

தனக்கு நிகராக யாரும் வளரந்துவிட கூடாது. கீழ் நிலையிலே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் டாக்டர் திருப்பதி போன்ற உழைத்தவர்களை அதிமுகவில் ஓரம் கட்டினார். இவரை மட்டுமா மட்டம் தட்டி வைத்தார்? முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், வடிவேலு, நிலோபர் கபில், விஜய் முகம்மது ஜான், சோளிங்கர் பார்த்திபன், கே.கே.மணி, லதா உதயகுமார், வக்கீல்கள் பாலசுப்பிரமணியம், ரவிக்குமார், நாட்றம்பள்ளி சகாதேவன், பழனிச்சாமி, கேஜி சுப்ரமணி, ஆம்பூர் பாலசுப்பிரமணியம், ஜெயந்தி பத்மநாபன், எல்.கே.எம்.பி.வாசு, நீலகண்டன், ஏஜிஎஸ் ஞானசேகரன், நகைக்கடை சரவணன், ஆற்காடு கே.வி.ராமதாஸ், குடியாத்தம் ஜெ.கே.என்.பழனி போன்றவர்களை காலை வாரி, வளரவிடாமல் தடுத்து உச்சத்துக்கு சென்ற வீரமணிக்கு இன்று எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்ற தொண்டர்கள்தான் வீரமணி வேலுமணி அன்பழகன் போன்றோர்களை அசிங்கப்படுத்துகின்றனர். யோசிக்காமல் எடுத்த முடிவு எங்க கொண்டு போய் விட்ருக்குன்னு பார்த்தீங்களா “அதிமுக இயக்கம் நிலையானது” என்றனர்

650% அளவுக்கு சொத்து குவிப்பு வழக்கு. தேர்தல் ஆணையமே முன்வந்து பதிவு செய்த வழக்கு, வேலூரில் நில அபகரிப்பு என ஏராளமான வழக்குகள் வீரமணி மீது நிலுவையில் இருந்து வருகிறது. இதையெல்லாம் விஜய் உணர்ந்தால் வீரமணி கட்சிக்கே வேண்டாம் என்று கூறி விடுவார்” என்கிறார் ஒரு தவெக நிர்வாகி.

பதவி ஆசை யாரை விட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago