தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் எடப்பாடிக்கு எதிராக திரண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தடுக்கி விழுந்து கொண்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தவைதான் என்றாலும் திடீரென்று சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென்று வேலுமணி நாலு மணிக்குச்சொல்லியுள்ளார்.
அதன்பின் சசிகலா தூக்கத்திலிருந்து எழுந்து வந்து நான்கு நாட்களாக தூக்கமில்லை என்று ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போதும் பழைய சங்கதிகளையே சொல்லி அரைத்த மாவை மீண்டும் அரைத்திருக்கிறார்.
உடனே சசிகலாதான் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளாராகிறார் என்று கிளப்பி விடுகிறார்கள். இதனை தேர்தலுக்கு முன்பே செய்திருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்கும்.
கட்டுரைக்குள் நுழையும் முன் குறிப்பிட்ட சில ரகசியங்களை அறிவது அவசியம். சசிகலாவால் அறிவிக்கப்பட்ட தென்னந்தோப்பு வேட்பாளர்கள் முதலில் சசிகலாவின் கட்சியிலேயே இல்லாதவர்கள். முதுகுளத்தூர் ராம்குமார் பாண்டியன் ஆப்பநாடு மறவர்சங்கத் தலைவர். சாத்தூரில் நின்ற இசக்கிராஜாத் தேவர் பிஎம்டி இயக்கத்தைச்சேர்ந்தவர். தேர்தல் நெருக்கத்தில் திடீரென வந்து இணைந்தவர் உசிலம்பட்டி அய்யப்பன். இவர்கள் மட்டுமே ஏதோ கொஞ்சம் சொல்லிக் கொள்ளுமளவு ஓட்டுக்களைப்பெற்றவர்கள். மீதமிருந்த வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் போனவர்கள்.

ஆக,சசிகலாவின் நீண்டநாள் விசுவாசிகள் யாரும் அந்த சின்னக்கட்சியிலேயே வேட்பாளாராகதவர்கள். சிவகாசி நேஷனல் கணேசன் ஒரிஜினல் திமுககாரர். இதனையெல்லாம் தெரிந்துகொண்டுதான் எடப்பாடி சசிகலா பற்றி எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார். ஆனால், இப்போது சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என வதந்திகள் வருவதால் தேர்தலுக்கு முன் நடந்த ஒரு ஃபிளாஸ்பேக்கை தெரிந்துகொள்வோம்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற ஒரு கட்சியை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு சசிகலா தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய நாள் அஷ்டமி திதி. அன்று கிருத்திகை நட்சத்திரம் மாலை 6.45 வரை. ஆனால், அவர் கமுதி கோட்டைமேட்டில் மேடையேறிய நேரம் ரோஹிணி நட்சத்திரம் ஆரம்பித்த நேரம். அவர் தன்கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய நட்சத்திரம் ரோஹிணி. சசிகலா மீனராசி ரேவதி நட்சத்திரம். ரேவதிக்கு பலன் தராத நட்சத்திரம் ரோஹிணி.
ஜோதிடத்தை பெரிய அளவில் நம்புகிற சசிகலா இதையெல்லாம் பார்த்தாரா? அல்லது பார்த்தவர் சொன்னதை விட்டு விட்டு அதற்கு நேரெதிராக செயல்பட்டு வேறு சாமியார்களிடம் மாட்டி விடப்பட்டாரா? அவர் நம்பிய ஜோதிடர்கள் இதை சரியாகத்தான் கணித்துச் சொன்னார்களா என்று சந்தேகமெல்லாம் உள்ளது என்று கார்டன் வட்டாரங்கள் கதைக்கின்றன.

ஏனென்றால், அவர் மேடையேறுவதற்கு முதல்நாளே சசிகலா நடராஜனின் மூத்த சகோதரர் விளார் சாமிநாதன் மரணமடைந்து விட்டார். பொதுவாக இழவு வீட்டுக்காரர்கள் குறைந்தது மூன்று நாளைக்காவது வெளியேறக்கூடாது என்பது மக்கள் கடைபிடிக்கும் சாஸ்திரம். அதை சசிகலா அறிந்தே புறக்கணித்திருக்கிறார். ஆக, ஆரம்பமே அபசகுனத்தில் தொடங்கிவிட்டது.
மேலும், முதன்முறையாக ஒரு கட்சியை தொடங்கும்போது பிரம்மாண்டமாக கூட்டத்தை காட்டியிருக்க வேண்டும். அதிலேயே சசிகலா பெரிய தோல்வி கண்டுள்ளார். மொத்தக்கூட்டமே 20 ஆயிரத்தை தாண்டாது. உளவுத்துறை ரிப்போர்ட் வெறும் 10 ஆயிரம் மட்டுமே! வந்த கூட்டமும் சசிகலா பேசத்துவங்கிய சில நிமிடங்களில் கலைந்து விட்டனர். இத்தனைக்கும் அந்தக்கூட்டத்தில் நெல்லை முதல் தென்மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர்.
அடுத்ததாக திடீரென்று வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை அறிவித்தார். அந்த நேர்காணலில் “வேட்பாளராவதற்கு யாரையும் சிபாரிசுக்கு தேடிப்போக வேண்டாம் என்றும் அனைத்தையுமே தாமே பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தகுதியான நபர்கள் சசிகலாவின் தம்பி திவாகரனையோ அவரது மகன் ஜெய்ஆனந்தையோ போய்ப்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள்தான் சசிகலாவின் இல்லத்தில் அவ்வப்போது வெளியில் வந்து தலையைக்காட்டி ஆள் பிடித்தார்கள்.
வேட்பாளர் விண்ணப்பபடிவத்திற்கு தலா 5000 வீதம் வசூலித்து விட்டு விண்ணப்பிக்காத பலரை வேட்பாளராக அறிவித்தார்கள். அப்படியானால் விண்ணப்பித்தவர்களின் கதி என்ன? என்று கேட்டால் நியாயமான ஒரு பதிலும் இல்லை.
இது தவிர, வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் கட்சி தொடங்கிய பத்து நாளில் “கட்சியில் எத்தனை வருடங்களாக உறுப்பினராக உள்ளீர்கள்?” என்ற கேள்வி பெரிய ஜோக்! விளாத்திகுளம் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பெண்ணின் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரது வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டது.
அதன்பின்னராவது செல்வாக்குமிக்க நபரை வேட்பாளராக அறிவிப்பாரா? என்று தொகுதியில் கணிசமான ஓட்டு பெறுபவர்களை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் இருந்த நபர்களுக்கு பெருத்த ஏமாற்றம். வேதனை. சுயேச்சையாக மாவட்டக் கவுன்சிலரானவரையும் 20 வருடங்கள் ஒன்றிய செயலாளராக இருந்து அரும்பாடுபட்ட நபர்களையும் ஒதுக்கி விட்டு காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் இருந்தவர்களை வேட்பாளராக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமுதாவும் நிராகரிக்கப்பட்டு தொகுதியில் தென்னந்தோப்பையே காணவில்லை. சின்னத் தோப்பாகவாவது இருக்குமா? எனத் தேடினால் தோப்பையே காணோம்.
கோவில்பட்டி தொகுதியில் சசிகலா கட்சியின் கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப.கண்ணன் ஆரம்பத்தில் சுற்றிச்சுழன்றார். பிரசாரத்தை வேகமாக்கினார். ஆனால், சசிகலா பிரசாரத்தின் போது வேட்பாளர் சுப.கண்ணனை அழைத்த சசிகலாவின் அல்லக்கையும், ஸ்ரீபெரும்புதூரின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மொளச்சூர் பெருமாள் என்பவர் மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார். ‘என்ன மயிறு மாதிரி கூட்டம் கூட்டியிருக்கிறாய்?’ என்று எடுத்த எடுப்பிலேயே ஏளனமாகப் பேசியிருக்கிறார். அவர் சாதாரணமாகவே ஆட்களை நீ வா…. போ…. என்று ஒருமையில்தான் பேசுவாராம்.
அம்பேத்கார் சிலைக்கு ஏன் மாலை போடவில்லை? என்று மொளச்சூர் கேட்டவுடன் வேட்பாளர் ‘ தேர்தல் சீசனில் போய் மட்டும் மாலை போட்டால் நாடகமாடுகிறீர்களா? என்றும் இப்பதான் கண்ணு தெரியுதா? என்றும் கேட்பார்கள் என உரிய விளக்கம் அளித்ததை ஏற்காமல் மொளச்சூர் பெருமாள் ‘மொளகாயாய்’ உறைத்திருக்கிறார்.
எங்கேயோ ஸ்ரீபெரும்புதூரில் பிழைப்பு நடத்திய பெருமாளுக்கு தென்மாவட்டத்தைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு கோவில்பட்டி மண்ணின் மகிமை தெரியுமா? அப்பகுதி மக்களின் குணம் தெரியுமா? அல்லது நடந்த நிலவரத்தை சசிகலா கவனத்திற்காவது கொண்டுசென்றார்களா? அல்லது கவனத்திற்கு வந்தும் சசிகலா கண்டுகொள்ளவில்லையா? என்று கேட்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
இதனை கேள்விப்பட்ட பசும்பொன் தேசிய கழகத்தின் தலைவர் ஜோதிமுத்துராமலிங்கம் இனியும் பொறுப்பதில்லை என்று கருதி வேட்பாளரையே போட்டியிலிருந்து விலக்கிக்கொள்வதாக உடனே அறிவித்து விட்டார். தூத்துக்குடியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏசாதுரை மிகுந்த வறுமையில் உள்ளவர் என்பது தெரிந்தும் ‘அம்போ’ என விடப்பட்டார். அவர் தற்போது ரத்தக்கண்ணீர் வடிப்பதாக தகவல்.

நாங்குனேரியில் வேட்பாளரான முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரைப்போல் கட்சியினராலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார். கூட இருந்தவர்களே குழிபறிப்பு வேலையில் ஈடுபட்டதால் நொந்து நூலாகி விட்டார். எதிர் வேட்பாளர்களாக அதே தேவர் சமூகத்தைச்சேர்ந்த அ.ம.மு.க. இசக்கிமுத்துவும், சுயேச்சை குமார் தேவரும் போட்டியிடுகிறார்கள் என்று தெரிந்தும் வெள்ளத்துரையை போட்டியிட வைத்தது இனத்திற்குள்ளேயே சண்டை மூட்டி விடுவதாக சசிகலா குழுவினர் உணரவில்லை என்று பேசுகிறார்கள்.
முதுகுளத்தூரில் செல்வாக்குமிக்க முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்படியானின் அண்ணன் மகனான புலிகேசியையும் வேட்பாளராக்காமல் ஏமாற்றியது அவரின் சொந்தபந்தங்களை அதிருப்திக்கு ஆளாக்கி விட்டது. பசும்பொன் நினைவாலய ராமகிருஷ்ணனும் ஏமாற்றப்பட்டார்.
நாம் மேலும் இதுகுறித்து மூத்த அரசியல் பிரமுகரும் தென் மாவட்ட தொகுதி நிலவரங்களை அறிந்தவருமான ஒருவரிடம் கேட்டோம். அவர் நம்மிடம், ” சசிகலா தேர்தலில் களமிறங்கியபோது ஏற்பட்ட உற்சாகமும், உத்வேகமும் வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் அவையெல்லாம் ஒன்றுமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது.
திருமங்கலம் ஜீவிதா நாச்சியார், வாசுதேவநல்லூர் பொன்னுத்தாயி, சங்கரன்கோவில் வசந்திமுருகேசன், சாத்தூர் இசக்கிராஜாத்தேவர் போன்ற ஒரு சிலரே களத்தில் கொஞ்சம் கடுமையாக போட்டியிட்டனர். ஆனால், அவர்களுமே எடப்பாடியின் வேட்பாளர்களின் லீடிங்கைத்தான் குறைத்ததே தவிர, இலையை பெரிய அளவில் பாதிக்கவில்லை.
மேலும் சாத்தூரில் தேவர் இனத்தவரான நயினார் நாகேந்திரனை எதிர்த்து இனத்திற்குள்ளேயே பகையை உண்டாக்கியதுடன், மாற்று சமூகமான சூரிய வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றி பெற மறைமுகமாக உதவியிருக்கிறார்கள். எடப்பாடியை காலி செய்வதாக நினைத்து இனத்தையே காலி செய்து விட்டதாக தேவரினத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விருதுநகர்காரரான நேஷனல் கணேசனை சிவகாசியில் நிறுத்தி அவர் தேர்தல் பணியிலேயே வேகம் காட்டவில்லை. முதன்முதலாக செயல் வீரர்கள் கூட்டத்தில் வெறும் 5000 ரூபாயை கணேசன் தர, நிகழ்ச்சியை நடத்திய கட்சிக்காரர் ”அண்ணே! நான் என் சொந்தப்பணம் ஒன்றரை லட்சம் செலவழிச்சு நடத்தியிருக்கேன். உங்க ரூபாயை நீங்களே வச்சுக்கோங்க!’ என்று பேசியிருக்கார். நேஷனல் கணேசன் முரட்டுச்செயின் போட்ருந்திருந்தாலோ, என்னவோ அவர் ஒரு நல்ல ‘இன்கம்மிங்’ என நினைத்து பலரை ‘அவுட் கோயிங்’ பண்ணி விட்டார்கள்.

ராமதாஸூடன் கூட்டணி கண்டுவிட்டு, அவருடன் ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட ஒரே மேடையில் சசிகலா பேசவில்லை. மயிலாடுதுறையில் ராமதாசு ஒருவரை வேட்பாளராக அறிவித்ததை தெரிந்தும், சசிகலா அவரின் வேட்பாளரை அறிவித்து விட ஆரம்பமே குழப்பம். குதர்க்கம்.
கட்சியை தொடங்கியவர்கள் ஒரு பூத் கமிட்டி கூட அறிவிக்கவில்லை. நிர்வாகிகளே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த ஒரே இயக்கம் அ.பு.த.ம.மு.க! (வாயிலேயே நுழையவில்லை) அந்தக் கட்சியை பதிவு செய்த முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதியான நரசிம்மனுக்கே சீட் இல்லையென்று சொல்லி இருக்கிறார்கள். அவரையே நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் என்றால் அந்தக்கட்சியின் பரிதாப நிலை என்னவென்று சொல்லவா வேண்டும்?
தலைமையே யாரையும் கண்டுகொள்ளாமல் விடவே வேட்பாளர்களும் லோக்கலில் அனுபவமிக்க கட்சிக்காரர்களை சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்காமல் ஒப்புக்கு ஓட்டுக்கேட்டனர். ராமநாதபுரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் யாரென்றே தெரியாது. அவர் யாரையும் தேர்தல் பணியாற்ற கூப்பிடவுமில்லை.
அருப்புக்கோட்டையில் தர்மராஜன் என்ற யாருக்குமே தெரியாத திருச்சுழி தொகுதியைச்சேர்ந்தவரை ‘டம்மி’யாக போட்டு கும்மியடித்துள்ளனர். அந்த தர்மராஜன் பல பகுதிகளில் ஓட்டுக்கேட்டே வரவில்லை. வேன் ஓட்டுறவனெல்லாம் வேட்பாளராய்யா? என்று மக்கள் பேசிகிறார்கள். முக்குலத்தோர் கணிசமாக உள்ள விருதுநகரில் வேட்பாளரே அறிவிக்கப்படவில்லை. இப்படி சசிகலாவும், அவரது சகலகலா வல்லவர்களான(!) வேட்பாளர்களும் களத்தில் திணறி காணாமல் போனதெல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது!” என்றார்.
நாம் சென்னையைச் சேர்ந்த அரசியல் நெறியாளரிடம் கேட்டபோது ” சசிகலா பரப்பன அக்ரஹாரத்தில் இருந்து தனது படைபரிவாரங்களுடன் வந்த போதே அவர் அரசியலில் பரிணமிக்கத்தவறி விட்டது பெரிய தவறு. காலதாமதமாக வந்த பிறகும் சரியான வியூகங்களை வகுக்கத் தவறி விட்டார். பல வேட்பாளர்களால் களம் சரியில்லையென்று தெரிந்த பின்னரும் கூட, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தவே முயற்சிக்காதது அதை விட பெரிய அலட்சியம். அவர் அம்மாவை விட பெரிய ராஜதந்திரி… அவரின் சாணக்கியத்தனம் சரித்திரம் படைக்கும் என்று வக்காலத்து வாங்கியவர்கள் எல்லாம் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள்.
சசிகலாவின் உறவினரான ஒரு முக்கிய இளைஞர் “தன் தந்தையை தேவகவுடா என்றும் தான் குமாரசாமி ராஜாவாய் செயல்பட்டு ஆட்சியைப்பிடிப்போம் என்று பலரிடம் சொன்னதெல்லாம் கூட அவர்களின் ‘ரேஞ்ச்’ என்னவென்று காட்டி விட்டது. இது போன்ற அரசியல் சாக்ரட்டீஸ்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் சசிகலாவின் எதிர்காலம் அஸ்தமித்து விட்டது. ஏனென்றால், சசிகலா சாதனை படைப்பார் என்றெண்ணி இருந்தவர்களின் கனவிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டார்” என்கிறார்கள்.

நாம் பின்னர் டி.டி.வி.தினகரன் வட்டாரத்தில் பேசியபோது, ” ஓட்டப்பிடாரம் சுந்தர்ராஜனையும், பெரியகுளம் கதிர்காமுவையும், காரைக்குடியில் தேர்போகி பாண்டியையும் வேட்பாளராக்கியதால் தினகரன் தனது நன்றிக்கடனை செலுத்தி விட்டார். கஷ்டத்தில் இருந்த அவர்களுக்கு சீட்டும் பெற்று கணிசமான கோடிகளையும் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார். ஆனால், சசிகலாவோ நேற்று வந்த இசக்கிராஜாவை வேட்பாளராக்கி இனத்திற்கெதிராக சதி செய்திருக்கிறார். ஆனால், தினகரனோ விட்டுக்கொடுத்துப்போய் கட்சியை சரியான நேரத்தில் கூட்டணி கொள்ள வைத்து, தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்று நிரூபித்துள்ளார். அவரே சொன்னது போல் சின்னம்மா கட்சியெல்லாம் ‘திடீர் சாம்பார்… திடீர் சட்னிதான்” என்று தெரிந்து விட்டது!” என்றார்கள்.
தேர்தலுக்குப்பின் சசிகலாவின் நிலை என்ன என்று கேட்பவர்கள் அதிகமிருப்பதால் நாம் அவரது வட்டாரத்திலேயே சிலரிடம் கேட்டோம். அவர்கள் நம்மிடம்,” சசிகலா சரியான நபர்தான். ஆனால், அவர் கேட்பார் பேச்சைக்கேட்டு கெட்டுப்போய்விட்டார். அரசியல் சாணக்கியர் எம்.நடராசன் உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் சசிகலா தெரிந்தே தனது அரசியல் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்.
அவர் நல்ல ஆலோசகர்களின் பேச்சை மார்ச் 4 ந்தேதி வரை கேட்டு நன்றாகத்தான் செயலாற்றினார். ஆனால் அதன் பின் அவரின் செயல்பாடுகள் தவறான நபர்களால் முடக்கப்பட்டது. நீண்டகாலம் விசுவாசிகளாக இருந்தவர்களை எல்லாம் அவர் இழந்து விட்டார். கடந்த பத்தாண்டுகளாக அவரது இல்லத்திற்கு பத்து பேர் கூட வராதநிலையில் கடந்த சில மாதங்களாக தினமும் ஆயிரம் பேராவது வந்து போனதை அவர் நினைத்துப்பார்க்கவில்லை. தவறு செய்வது தடுமாறுவது எல்லாம் சகஜம்தான். ஆனால், தெரிந்தே தவறு செய்ததால் அவரை அம்மாவின் ஆன்மாவே கைதூக்கிவிடாது!” என்று சொன்னது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
இன்னொரு டெல்லி பிரமுகர் ஒருவர் நம்மிடம் “முதலில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூணு பேருமே ஒன்றிணையவில்லை. சசிகலா மேற்கொண்டு பணம் செலவு பண்ணச்சொல்வார் என்று தெரிந்துதான் ஓபிஎஸ்ஸே திமுகவுக்கு ஓடினார். இத்தேர்தலில், இந்த லட்சணத்தில் தினகரனை கூட அவர் ஜெயிக்கமுடியவில்லை. இதுதான் நிஜம். நாங்கள் எல்லாம் சசிகலாவை ரொம்ப நம்புனோம். ரொம்ப செலவழிச்சோம். ஆனால், அவரோ ‘போங்கடா புண்ணாக்குகளா’னு சொல்லாம சொல்லீட்டார். அவருக்கென்ன? அவர் பாட்டுக்கு வந்துட்டு போயிட்டார். நாங்கதானே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்துல இருக்கோம். அந்தம்மாவுக்கு ஏற்கெனவே 75 வயசாயிடுச்சு. இன்னும் அஞ்சு வருஷம் தாக்குப்பிடிக்கும். அதுக்குப்பின்னாடி அவங்க என்னத்த வந்து…. என்னத்த சாதிச்சு….. என்னத்த வாசிக்கப்போறாங்க? போங்க சார்…நீங்களும் உங்க அரசியலும்….என்று கேலியும் கிண்டலுமாகச்சொன்னார்.

இத்தனை காலம் சசிகலாவை கிங் மேக்கர் என்றும், இல்லையில்லை, அவர் கிங் என்றும் சொன்னவர்கள் எல்லாம் இனிமேல், “என்னாது..? சசிகலா கிங்கா? என்னாது..? அவரு கிங் மேக்கரா? போய்யா போக்கத்தவனே!னுதான் சொல்லப்போறாங்க.
நாங்க ரெண்டு பொம்பளங்க என்னென்ன பண்னோம்.? அம்மாகிட்டே 35 வருஷம்கூட இருந்தே பாடம் படிச்சவ நான்… நான் ஒருத்தி இங்கே இருக்கேங்கிறதையே மறந்துட்டீங்களா?’ என்றெல்லாம் பேசி உசுப்பேற்றிய சசிகலா இன்றைக்கு தேர்தலில் தான் ஒரு சரவெடியல்ல! சங்குமார்க் புஸ்வாணம், என்று காட்டி விட்டார்!
உண்மைகள் இப்படியிருக்கையில் இன்னுமா இந்த உலகம் சசிகலாவை நம்புகிறதென சசி ஆதரவாளர்களே சொல்வது சி.வி.எஸ், எஸ்.பி.வி. அணிகளுக்கு தெரியாதென நினைக்கிறோம். என்றைக்கு மூன்றாவது சக்தி முதலிடத்திற்கு வந்து விட்டதோ அன்றைக்கே அதிமுக அவுட்! முதலமைச்சர் விஜய் சொன்னது போல் போட்டியே திமுகவிற்கும் த.வெ.க.வுக்கும் இடையில்தான் என்பது நிகழ்ந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இணைந்தாலும் அது இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாகத்தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
