Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Nurses

சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஒப்பந்த செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செவிலியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து பேருந்துகளில் ஏற்ற காவல்துறையினர் முயன்ற நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக கைது நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று, அக்டோபர் 5-ஆம் தேதி காலை முதலே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த அடிப்படையிலான பணிமுறையை நீக்கி பணி நிரந்தரமும் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

சுமார் 4,000 செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக போராட்டக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதையும் படியுங்க  "அனிதா போனாலும் அவளது குரல் ஓயாது! டெல்லியை உலுக்கிய அண்ணன் மணிரத்தினத்தின் வீர முழக்கம்!"
Nurses

மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் 5 பிரதிநிதிகளை அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் செல்வதாகக் காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல், ஒரு திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டதாக போராட்டக் குழுவின் சட்ட ஆதரவுக் குழு வழக்கறிஞர்கள் வரதராஜன் மற்றும் பாலன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

தலைமைச் செயலகத்திற்குப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற 5 பிரதிநிதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினர் தடுத்ததாகவும், அரசு மற்றும் காவல்துறை தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பிரதிநிதிகளை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என செவிலியர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மாலை நேரத்தில் போராட்டக் களம் இருந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், பந்தல்கள் அகற்றப்பட்டதாகவும் செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், போராட்டக்காரர்கள் செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டு இருட்டிலும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இரவு சுமார் 8.30 மணியளவில், செவிலியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் குண்டுக்கட்டாகத் தூக்கி அரசுப் பேருந்துகளில் ஏற்றத் தொடங்கியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். காலை முதலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின்போது சில பெண் செவிலியர்கள் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகம்… மன அழுத்தத்தைப் பேசத் தவறுவது ஏன்? கல்வி அதிபரின் மரணம் உணர்த்தும் உண்மை!"

கைது செய்யப்பட்ட செவிலியர்களை ஏற்றிச் செல்ல பேருந்துகள் தயாராக இருந்த நிலையில், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் அந்தப் பேருந்துகளைச் சூழ்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் பேருந்துகளின் டயர்களுக்கு முன்பாகப் படுத்துக்கொண்டதால், பேருந்துகளை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவிலியர்களின் கடும் எதிர்ப்பாலும், தள்ளுமுள்ளுவால் ஏற்பட்ட பதற்றத்தாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையைத் தற்காலிகமாகக் கைவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, செவிலியர்கள் ராஜரத்தினம் மைதானத்திற்கு வெளியே எழும்பூர் சாலையில் நடுத்தெருவில் அமர்ந்து தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். பின்னர் அவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவர் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், செவிலியர்களைக் கைது செய்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  "இபி ஆபீஸ்ல இருந்து வர்றோம்.." மீட்டர் பாக்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்ட ₹50-ஆ? திண்டுக்கல்லில் சிக்கிய பலே லேடி.. மக்களே உஷார்!
Nurses

இதனிடையே, போராட்டக் குழுவின் சட்ட ஆதரவுக் குழு வழக்கறிஞர் வரதராஜன், செவிலியர்களின் 5 பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர்களை அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் தடுத்து வைத்துக் கைது செய்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத துரோகம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

செவிலியர்களின் போராட்டத்தின்போது யாருக்கேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவின் சட்ட ஆதரவுக் குழு எச்சரித்துள்ளது.

தற்போது ஆயிரக்கணக்கான செவிலியர்கள் எழும்பூர் சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago