Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Radha - Ambika

செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ராதா அளித்த புகாருக்கு, அவரது சகோதரி நடிகை அம்பிகா பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முன்னணி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது பணம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தனது வீட்டில் இருந்த பழைய கையெழுத்திடப்பட்ட 5 காசோலைகளைத் திருடி, அதன் மூலம் ரூ.46 கோடி முதல் ரூ.50 கோடி வரை பண மோசடி செய்ய முயன்றதாக அம்பிகா மற்றும் தனது சகோதரர் மல்லிகார்ஜுனா மீது ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அம்பிகா, ராதா தங்களுக்கு ரூ.97 கோடி வரை கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், தங்களுக்கு தர வேண்டிய பணத்திற்காக ராதாவே அந்த காசோலைகளை தன்னிடம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வைர நகைகளை ராதா வைத்துக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாகவும் அம்பிகா குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் தங்களுக்குள் உள்ள சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்ளாமல், ராதா பொதுவெளியில் காவல்துறையில் புகார் அளித்திருப்பது தமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தான் இல்லாத நேரத்தில் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவசரத் தேவைக்காக தான் கையெழுத்திட்டு வைத்திருந்த பழைய காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் தங்களுக்கு வேண்டிய தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தியதாக ராதா குற்றம்சாட்டியிருந்தார். வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தி மூலம் இதை அறிந்த ராதா, உடனடியாக ‘ஸ்டாப் பேமென்ட்’ கொடுத்து பணப் பரிவர்த்தனையைத் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "பிரவீணாவின் 'R' மோதிரம்... பூர்ணிமாவின் பெருந்தன்மை! பாக்யராஜ் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான உண்மை!"

தங்களுக்கு இடையே மூன்றில் ஒரு பங்கு பங்கு தொடர்பான விவகாரம் இருப்பதாக அம்பிகா தெரிவித்துள்ளார். அந்த விவகாரம் குறித்து பேசுவதற்கும், தீர்வு காண்பதற்கும் ராதா தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என்றும், ஆர்பிட்ரேஷன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க தாங்கள் கோரிக்கை விடுத்தும் அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Radha - Ambika

இதையடுத்து, ஜூலை மாதத்தில் சென்னை காவல் ஆணையரிடம் தாங்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் மதுரவாயல் டிசி மற்றும் ஏசி தலைமையில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ராதா தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராதா நேரில் வர முடியாதபோது அவரது மேலாளர் அல்லது பிரதிநிதி ஒருவர் வருவதாகவும், ஒருமுறை தாம் படப்பிடிப்பில் இருந்தபோது அந்த பிரதிநிதி வந்ததாகவும் அம்பிகா கூறியுள்ளார். தாம் இல்லாதபட்சத்தில் தனது தம்பி வருவார் என ஏற்கனவே தெரிவித்திருந்தபோதும், அங்கும் உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தொலைபேசி எண்ணை ராதா பிளாக் செய்திருப்பதாகவும், கடைசியில் 5757 என முடியும் எண்ணுக்கு அழைத்தபோது ரிங் அல்லது என்கேஜ்டு சத்தம் எதுவும் வரவில்லை என்றும், அது பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

தங்க நகைகள் தொடர்பாகவும் பிரச்சினை இருப்பதாக அம்பிகா தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற காலத்தில் தானும் தனது தாயாரும் சென்று, தன் பெயரில் இருந்த தங்க நகைகள் குறித்து கேட்டதாகவும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  "அரசியல் செல்வாக்கு வேண்டாம்.. உழைப்பால் பெயர் எடு! தந்தை விஜய் சொன்ன அட்வைஸை உடைத்த ஜேசன் சஞ்சய்!"

ராதாவுக்கு தங்கத்தின் மீது அதிக விருப்பம் இருப்பதாகவும், குடும்பத்தில் உள்ள சகோதரிகள் அல்லது தாயாரிடம் இருந்த தங்கத்தை எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராதாவிடம் ஏற்கனவே நிறைய தங்கம் இருப்பதாகவும், தனது நகைகளை மட்டும் திருப்பித் தருமாறு கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்களது தாயார் இறப்பதற்கு முன்பே செட்டில்மென்ட் மற்றும் அபிடவிட் உள்ளிட்ட ஆவணங்கள் செய்யப்பட்டதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். தனது சொத்து மற்றும் தனக்கு வர வேண்டிய பங்கு தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், தாயார் உயிருடன் இருந்தபோதே குடும்பத்தினர் அனைவரும் பேசி முடிவு செய்த விஷயங்கள் இவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ராதா தங்களிடம் பேசும்போது ஒரு விதமாகவும், வீட்டுக்குள் சென்ற பிறகு வேறு விதமாகவும் பேசுவதாகவும், இதனால் தவறான புரிதல்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விவகாரத்தையும் அம்பிகா குறிப்பிட்டுள்ளார். தனது தாயார் இறப்பதற்கு முன்பு, ஏஆர்எஸ் கார்டனில் தனது பெயரை நீக்கிவிட்டு அக்கா ராதாவின் பெயரை வைக்குமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராதாவின் கணவர் ராஜசேகரன் நாயர், ‘மறுநாடன் மலையாளி’ என்ற மலையாள ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் கூறியிருப்பதாக அம்பிகா குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் சுமார் 13 நிமிடங்கள் 13 வினாடிகள் பகுதியில் இந்த தகவல் இடம்பெற்றிருப்பதாகவும், அதை பார்த்தால் விவரம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு…! நான் தைரியமா இருந்ததாலதான் உயிரோட இருக்கேன்!".. அடங்காத திவாகர்..!

ஆனால், இருவரின் பெயர்களையும் வைக்காமல் வேறு பெயரில் ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து தனக்கு கேள்வி இருப்பதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் ஒருவர் தொடர்பான முக்கியமான சொத்து விவகாரத்தில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராதா மிகவும் கவனமாக பொருட்களைப் பாதுகாப்பவர் என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார். கைப்பை மற்றும் சிறிய லக்கேஜ் போன்றவற்றைக் கூட ஜிப் போட்டு, நம்பர் லாக் வைத்து பாதுகாப்பாக வைத்திருப்பார் என்றும், தன்னுடைய அறையில் தங்கியிருந்தாலும் இரவு தூங்கும்போது தனது பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

இவ்வளவு கவனமாக இருக்கும் ராதா, கையெழுத்திட்ட காசோலைகளை கபோர்டில் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை மற்றவர்கள் எடுத்துச் சென்று தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தியதாகவும் கூறுவது எப்படி சாத்தியம் என அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

காசோலை விவகாரம் குறித்து தனக்கு தனது தம்பி மூலமாகத்தான் முதலில் தெரியவந்ததாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். காவல் நிலையம் தொடர்பான விவகாரத்தில் ராதா தரப்பில் அவரது மேலாளர் வந்தபோது, தாம் படப்பிடிப்பில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு தரப்பிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விளக்கங்கள் வெளியாகி வரும் நிலையில், சொத்து, பணப் பரிவர்த்தனை, தங்க நகைகள் மற்றும் காசோலை தொடர்பான புகார்கள் குறித்து சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago