Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Aadhav: Udhayanidhi

உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் அரசுப் பொறுப்புகளில் இருக்கும் நிலையில், தொழில்களில் ஈடுபடுவது சாத்தியமா? தமிழ்நாட்டின் தொழில்துறையைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இதுதான் நலன் முரண்பாடு (Conflict of Interest) என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் ஒரு தலைவருக்கு அதிகாரத்தை வழங்குவது, அந்த அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். குடிநீர், சாலை வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே மக்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துகின்றனர். ஆனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தினர் தொழில்களில் ஈடுபடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், ஒருபுறம் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல்வேறு தொழில்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, சினிமா துறை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை எடுத்துப் பார்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கு முன்பு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை திரைப்படங்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பதையும், அதன்பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  'இனிமேல் உஷாராக இருப்போம்..! – ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்..!
Aadhav Arjuna

கிட்டத்தட்ட 2,000 திரையரங்குகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வணிகத் துறை மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய பேச்சைக் கேட்காத திரையரங்கு உரிமையாளர்கள் மீது சோதனைகள் நடத்தப்படலாம் என்பதால், அவர்கள் சுதந்திரமாகத் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். ஒரு முதலமைச்சரின் மகன் சினிமா தொழிலில் ஈடுபடும்போது, விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் அல்லது அமைச்சர்களின் குடும்பத்தினர் எந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், அவர்களுடைய தொழில் நடவடிக்கைகள் அரசின் அதிகாரத்துடன் தொடர்புடையவையா என்பதையும் ஆராய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது தொழில் செய்வதற்காகவா அல்லது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவா என்றும் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டே தொழில் செய்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை ஒருநாள் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், அது முடிவடையப் பல ஆண்டுகள் ஆகின்றன என்றும், நீதி தாமதமாவதால் ஆதாரங்கள் உடனடியாக வெளிவருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  விஜய்யை உசுப்பிய திருமா… திமுக போட்ட ‘திருச்சி ஸ்கெட்ச்’ க்ளோஸ்..? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

மேலும், சம்பந்தப்பட்டவர்களின் பேலன்ஸ் ஷீட், கணக்கில் இருப்பதாகக் கூறப்படும் பணம் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய பேலன்ஸ் ஷீட்டில் தொழில் விவரங்களைக் காட்டிவிட்டு, தொழிலில் இருந்து விலகிவிட்டதாகத் தன்னால் கூற முடியும் என்றும், ஆனால் முதலமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டே தொழில் செய்தவர்கள் அவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் எந்தக் கட்சியினரும் மிரட்டுவதில்லை என்றும், தாங்கள் சுதந்திரமாகத் தொழில் செய்து வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். அரசியல் நிதி வழங்க வேண்டிய கட்டாயம் இல்லாததால், தங்களுக்கு லாபம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கீழ்மட்ட அதிகாரிகள் அளவில் காணப்படும் ஊழலைப் பற்றியும் பேசிய ஆதவ் அர்ஜுனா, கடுமையான அழுத்தத்தின் மூலம் முதலமைச்சர் ஊழலை ஒழிப்பார் என்று கூறியுள்ளார். அதேபோல், சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் உருவாகியுள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இதனை ஒழிக்க அடுத்த மூன்று மாதங்களில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், தேவையான காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கீழ்மட்டம் வரை பணத்தைச் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  கிழிஞ்சது போங்க..! திமுக, பாஜக-வின் கைப்பாவையா அமைச்சர் ராஜ் மோகனின் பி.ஏ-வான அஜய்..? 

இத்தகைய செயல்பாடுகளைத் தடுத்து, வலிமையான ஆட்சியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கரூரில் 27ஆம் தேதியன்று உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நினைவுச்சின்னம் எங்கு அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு எப்போது நடைபெறும் என்றும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஒரு சகோதரரைப் போல முதலமைச்சர் மேற்கொண்டதாகவும் கூறினார். அதற்கும் சிலர் தடைகளை ஏற்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.

திமுக சில விஷயங்களில் நேரடியாகப் பேசாமல், மறைமுகமாகச் செயல்படுவதாகவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 hours ago at 20 hours ago