Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay’

2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இன்று பரபரப்பான வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்குகளை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 66,650 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆர்.டி. சேகர் மட்டுமின்றி, பெரம்பூர் தொகுதி வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதுதவிர, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த இனிகோ இருதயராஜும் அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால், முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மொத்தம் 4 தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நான்கு தேர்தல் வழக்குகளையும் நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள், வருமான வரி நிலுவைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை முறையாகத் தெரிவிக்காமல் தவறான தகவல்களை அளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  காங்கிரஸை கை கழுவிய திமுக..! டெல்லி கூட்டம் புறக்கணிப்பு… ‘இன்டியா’ கூட்டணிக்கு மாபெரும் பின்னடைவு..!

குறிப்பாக, விஜய் தனது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகவும், இதன் காரணமாக அவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்.டி. சேகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2025ஆம் ஆண்டு மதுரையில் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பதாக விஜய் குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2011 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் ₹34.44 கோடி வருமான வரி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படும் விவரத்தையும் விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் திட்டமிட்டு மறைத்ததாக எதிர்தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக தனது தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகவும் விஜய்க்கு எதிராக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் விஜய் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ₹648.9 கோடி என்றும், கடன்கள் ₹7.6 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆண்டு வருமானம் ₹184.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருமானம் மற்றும் சொத்து விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சுமார் ₹34.44 கோடி வருமான வரியை விஜய் அரசுக்குச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக எதிர்தரப்பு தரப்பில் முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "என் பேரைச் சொன்னாலும் விடாதீங்க..!– ஐஏஎஸ், ஐபிஎஸ்-களுக்கு முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..!

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த விஜய் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மனுதாரர்கள் சுமத்தியுள்ள சொத்து விவரக் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், அவற்றுக்கு அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக வாதிட்டார்.

வேட்பாளர்கள் தங்களுடைய சொத்துகள் மற்றும் கடன்களைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டே விஜய் தனது வேட்புமனு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகவும், இதில் எந்தவிதமான சட்டவிரோதமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சொத்து விவரங்களை முறையாகத் தெரிவிக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும் விஜய் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளிப்படுத்துவது தொடர்பாக 1999ஆம் ஆண்டின் 170வது சட்ட ஆணைய அறிக்கையில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின் பரிணாம வளர்ச்சியையும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

சொத்து விவரங்கள் மற்றும் வரிப் பாக்கி தொடர்பாக மனுதாரர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என்றும், இந்த தேர்தல் வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டவை என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தங்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள தேர்தல் மனுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால், அவற்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆரம்பத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் விஜய் தரப்பில் விரிவான சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படியுங்க  "தவெக ஜெயிச்சா தான் வார்டு குறைகள் தீரும்!" – சிவகாசி மேடையில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி பேச்சு!

இன்றைய விசாரணையில், முதலில் வாக்காளர் தினேஷ் தொடர்ந்த தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் கோபால் சங்கரநாராயணன் தனது வாதங்களைத் தொடங்கினார். அடுத்தகட்டமாக வாக்காளர் லட்சுமி நரசிம்மன் தொடர்ந்துள்ள மனுவை நிராகரிக்கக் கோரும் மனு விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் தரப்பின் வாதங்கள் நீண்ட நேரம் நடைபெற்றதால், இன்றைய தினத்துக்குள் வாதங்களை முழுமையாக முடிக்க முடியவில்லை.

கூடுதல் விவரங்களைச் சமர்ப்பிக்க விஜய் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை, அதாவது செவ்வாய்க்கிழமை தொடரும் என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார். விஜய் தரப்பின் வாதங்கள் முழுமையாகக் கேட்கப்பட்ட பிறகே, தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்த மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதனுக்கு பதில் வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் வாய்ப்பு அளிக்க உள்ளது.

இதனால், நாளைய விசாரணையில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில் என்ன மாதிரியான பதில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளில், வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் சொத்து, வருமான வரி நிலுவை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் முக்கிய சட்டச் சிக்கல்களாக உருவெடுத்துள்ள நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே நீதிமன்றம் அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 hours ago at 20 hours ago