சென்னை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான பயணிகளைக் கையாளுதல், ஓடுபாதையை விரிவுபடுத்துதல், புதிய முனையங்களைத் திறத்தல் போன்ற பணிகளுக்காக விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது சரியான அணுகுமுறையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தால் ஒரு பணியைச் செய்ய முடியவில்லை என்றால், அதைத் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் தீர்வா எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் எடுத்துக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுப்பது ஏன் எனத் தெரிவித்தார்.

நெய்வேலி பங்கு விற்பனைக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கும் அரசு, விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது முரண்பாடாக உள்ளது என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் சொத்துகள் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
அரசுப் பணிகளில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து சேவையை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது சரியல்ல என்றார். கல்வியை மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரும் அரசு, அதே மத்தியப் பட்டியலில் உள்ள விமான நிலையத்தை மத்திய பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது ஏன் என்றும், இந்தச் சொத்துகள் யாருடைய உழைப்பில் உருவானவை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை அரசாணையையும் அவர் விமர்சித்தார். ஆகஸ்ட் 19ஆம் தேதி, முதலமைச்சர் 110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் ஏழு துணை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், அதற்கான நிதியை அரசு வழங்காது என்றும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுயநிதி மூலம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.270 கோடி செலவில் அமையும் இத்திட்டத்திற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதன் மூலமாகத்தானே நிதி திரட்டப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கல்லூரிகளில் செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும், ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்டகாலப் பலன்கள் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 119ஆம் விதியின் கீழ் 4,724 செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 11 மாத ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றும், நிரந்தரப் பணியைக் கோர முடியாது என்றும், அரசுப் பணியாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டபோது எதிர்ப்புகள் எழுந்தன. கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை மாநில அரசே நடத்த வேண்டும் என பினராயி விஜயன் அரசு கோரியபோதும், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்குச் செல்ல வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்ததாக கனகராஜ் கூறினார். ஆனால், தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து விமான நிலையத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது புரியாத ஒன்றாக உள்ளது என்றார்.
சிபிசிஎல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பிஎச்இஎல், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என ஒன்றிய அரசு கூறினால், அதை ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சென்னை, தூத்துக்குடி ஆகிய இரண்டு முக்கியத் துறைமுகங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறை என்ன என்பதும் தெளிவாக இல்லை என்றார்.
சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஐந்தரை கோடி பயணிகளைக் கையாளுதல், ஓடுபாதை விரிவாக்கம், புதிய முனையங்கள் அமைத்தல் போன்ற இலக்குகளை அரசு நிர்ணயித்திருக்கலாம். டெல்லியில் உள்ள அதிகாரிகளை அணுகி முடிவெடுக்க முடியாத சூழலில், அதானி குழுமத்தை அணுகியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். ஆனால், அதானியோ அம்பானியோ சட்டத்தை மதித்து நடப்பார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், ஸ்டெர்லைட் நிறுவனம் சட்டத்தை மதித்து செயல்பட்டிருந்தால், ஆலை தொடர்ந்து இயங்கியிருக்கும் என்றும், தாமிரம் கிடைத்திருக்கும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் தாமதங்கள் மற்றும் சேவை குறைபாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையான விளைவுகளை ஆராயாமல் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுப்பது சரியல்ல என்றும், இந்த முடிவு அமைச்சரவை மூலம் எடுக்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தை வெளியிடுவது குறித்து தமக்கு பெரிய ஆட்சேபனை இல்லை என்றாலும், அதன் அடிப்படையிலான நடவடிக்கை தவறானது என்றும் கனகராஜ் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவின் நலனுக்கும் எதிரானது என்றும், அரசு இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
