தமிழ்நாட்டின் இரு முன்னணி நடிகர்களான அஜித் குமார்- விஜய் ஆகியோரின் லண்டன் சந்திப்பு, சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. லண்டனில் நடைபெற்ற அஜித் குமாரின் கார் பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய்யின் வருகை, இருவரின் அன்யோன்யமான இடைவினை பல்வேறு தரப்பிலிருந்தும் விதவிதமான பார்வைகளை உருவாக்கியுள்ளது.
ஒருபுறம், இத்தனை ஆண்டுகளாக எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட திரையுலகப் போட்டியாளர்கள் தற்போது காட்டும் இந்த இணக்கம், ரசிகர்களிடையேயான தேவையற்ற சமூக வலைதள சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், “இத்தனை ஆண்டுகள் ரசிகர்களை மோதவிட்டுத் தங்கள் இமேஜை வளர்த்துவிட்டு, இப்போது திடீரென ஒன்று சேர்வது ஏன்?” என்றும், மக்களின் கவனத்தை மடைமாற்றவே இந்த சந்திப்பு பயன்படுத்தப்படுகிறதா?” என்றும் விமர்சனக் குரல்கள் வலுத்து வருகின்றன. ப்ளூசட்டை மாறன் போன்ற சினிமா விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள், அஜித் ரசிகர்கள் வரை பல்வேறு தரப்பினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
”ரொம்ப நாட்களாக விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்று கொள்கையை வைத்து இருந்த அஜித் குமார், சமீப காலமாக விளம்பரங்களில் நடிப்பது.

ஒரு புறம், தங்களை விரும்பும் ரசிகர்கள் தங்களுக்குள் கேவலமாகச் சண்டையிடுவதைத் தவிர்க்காமல், இத்தனை நாட்களாக எதிரும் புதிருமாக இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்கிய அஜித் – விஜய் அவர்கள் இன்று சம்பந்தமே இல்லாமல் கொஞ்சி குலாவுவது, நல்ல விஷயம்தான் என்றாலும், இதை சற்று முன்னரே சொல்லி தங்களது ரசிகர்களைக் கட்டுப்படுத்தி இருந்தால், எவ்வளவோ சமூக வலைதள விவாதங்கள், கொச்சையான வார்த்தைகள், குடும்பங்களுக்குள் சண்டை — இவற்றை எல்லாம் தடுத்து இருக்கலாம்.

எந்த ஒரு விளையாட்டிற்கும் இல்லாத முக்கியத்துவம். ஒரு தனி மனிதர் விளையாடும், பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் ஒரு கார் பந்தயப் போட்டியைத் தொடங்கி வைக்க ஒரு தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முன் இவர்களுக்குள் இப்படிப்பட்ட ஓர் அன்யோன்யத்தை வேறு எங்குமே நாம் பார்த்ததில்லையே. இப்போது சமீப காலமாகத்தான் இது நடைபெறுகிறது. அப்போது இது எல்லாம் ரசிகர்களை முட்டாளாக்குவதற்கான காரியமா?
இந்த ஒரு கார் போட்டியை முன்னிறுத்தி யார் யாரெல்லாம் தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார்கள் என்று நான் தனியே விளக்கிக் கூறத் தேவையில்லை. எதற்காக இந்த ஒரு நாளில் இது நடைபெறுகிறது? இதற்கு முன் எத்தனையோ பந்தயங்களில் அஜித் குமார் பங்கேற்றார். ஏன் அப்போது யாரும் சென்று பார்க்கவில்லை?
வரலாற்றுச் சாதனையாக இந்திய அரசு அமெரிக்கா அல்லாது BRICS போன்ற ஒரு மிகப் பெரிய மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறது. இது ராஜாங்க ரீதியில் எவ்வளவு பெரிய விஷயம் என்று இன்று தமிழ்நாட்டில் யாருக்காவது தெரியுமா? அல்லது எந்த தமிழ் தொலைக்காட்சி ஊடகமாவது இதை ஒளிபரப்புமா? அஜித் அவர்களும், திரு. விஜய் அவர்களும் சந்தித்துக் கொண்ட செய்திதான் அடுத்த 3 நாட்களுக்குத் தலைப்புச் செய்தி. எப்படி புத்திசாலித்தனமாக நாம் ஒரு முக்கியமான தேசிய செய்தியில் இருந்து மடைமாற்றப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும்” என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர் ஒருவர், ”எல்லார்கிட்டையும் Honorable chief minister னு சொல்றாரு. அடுத்த சில நொடில வழி வகுத்து பம்பிட்டு நிக்கிறாரு. ஏதோ தவறு செய்த மாதிரி அவரு முகத்துல ஒரு வலி தெரியுது. நான் பார்த்த எங்க அஜீத் அண்ணன் இது இல்ல. இப்படி பாக்க அழுகையா வருதுயா ” எனக்கூறியுள்ளார்
சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்தளப் பதிவில், ”நீ என்ன உருகும் பனிமலை, நான்தானே எரிமலை எரிமலை என மோதினார்கள். அணில் குஞ்சுகளும், ஆமை குஞ்சுகளும் தியேட்டர் & சோஷியல் மீடியாவில் மோதிக்கொண்டன. இதை வைத்து தல & தளபதி பல கோடி சம்பாதித்து விட்டார்கள். நேரம் மற்றும் பணத்தை வீணாக்கிய அணில் மற்றும் ஆமை குஞ்சுகள் நிலை பாவம். அணில் குஞ்சுகளுக்காவது அவர் கட்சி ஆரம்பித்து அரசியலில் சிலருக்கு பதவிகளை கொடுத்து உயர்த்தியுள்ளார். ஆமைக் குஞ்சுகள் நிலைமைய நினைச்சாதான்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், ”அவர்கள் யாரும் தன் ரசிகர்களை சண்டை போட சொல்லவில்லை. ரசிகர்கள் டைம் பாஸ்க்காக சண்டை போட்டுக் கொண்டார்கள். தற்போது அனைவரும் மெச்சூரிட்டி அடைந்து விட்டார்கள். அவ்வளவுதான்.
”தன்னுடைய துறை சாதிக்க 2 பேரும் சண்டை போட்டாங்கன்னு வைச்சுக்கலாம். இப்ப ஒருத்தர் ஓருத்தர் சப்போர்ட்டா இருக்கக் கூடாதா? சாகுற வரை இந்தியா- பாகிஸ்தான் மாதிரி அடிச்சுகிட்டே இருக்கக முடியுமா? எனக் கூறியுள்ளார்.
”உண்மையான அஜித் -விஜய் ரசிகர்கள் அவங்க எல்லாருக்கும் இந்த ஒரு நிகழ்வு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். சண்டை ரெண்டு பேருமே செஞ்சோம்… எவ்ளோ அடிச்சிக்கனுமோ அடிச்சுக்கட்டும். முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். முடிச்சுகிட்டோம்” என சமாதானப்புறாவை பறக்கவிட்டு வருகின்றனர்.
