தமிழக அரசியலில் புதிய பணிக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய். அவர் பொறுப்பேற்ற நாள்முதல் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே அலுவலகத்திற்கு வருவார்கள் என்ற பழைய பிம்பத்தை முறியடிக்கும் வகையில், ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல நேரத்தை மிகத் துல்லியமாகக் கடைப்பிடித்து அலுவலகத்திற்கு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவிலேயே இந்த மாற்றத்தின் முதல் அறிகுறி தென்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் காலை 8:48 மணிக்கே நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய். அவரது இந்த முன்கூட்டிய வருகை அங்கிருந்த அதிகாரிகளிடையே உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தியது.
இதனை பதவியேற்பு நாளின் உற்சாகமாகவே பலர் கருதியிருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேர்த்தி தொடர்ந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு தொடங்க இருந்தபோதும், காலை 8:45 மணிக்கே தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தார் முதலமைச்சர். அதேபோல் சபாநாயகர் தேர்தல் நாளிலும் 9:30 மணி நிகழ்விற்கு முன்னதாகவே, காலை 8:55 மணிக்கு அவர் வருகை தந்தார்.
மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்ட அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் கூட, காலை 9 மணிக்கே தலைமைச் செயலக வளாகத்திற்குள் வந்துவிட்டார் விஜய். சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு எட்டு நிமிடங்களுக்கு முன்பாகவே தனது இருக்கையில் அமர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கியிருந்தார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று நாள் சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகும் அவரது இந்த பணித் தீவிரம் குறையவில்லை. நேற்றைய தினம் கூட, காலை 9:55 மணிக்கே கோட்டைக்கு வந்த முதலமைச்சர், மாலை 4 மணி வரை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
இவற்றையெல்லாம் விட அதிகாரிகளையும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரையும் அதிகமாகக் கவர்ந்த விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் முதலமைச்சரின் எளிமையான நடைமுறை. கோட்டையில் அவருக்கென சிறப்பு உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், தினமும் தனது வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துக்கொண்டு வந்து அலுவலகத்திலேயே உணவருந்தி, பின்னர் பணிகளைத் தொடர்கிறார் விஜய்.
ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல நேரத்திற்கு அலுவலகம் வருவது, அலுவலகத்திலேயே மதிய உணவை உட்கொண்டு தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்துவது போன்ற அவரது பணிப்பழக்கம், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரே இவ்வளவு துல்லியமாக நேரத்தை கடைப்பிடிப்பதால், தற்போது பல துறை அதிகாரிகளும் நேரத்திற்கு அலுவலகம் வரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனது செயல்முறைகளின் மூலம் புதிய அரசியல் மற்றும் நிர்வாக பணிக் கலாச்சாரத்தை தமிழகத்தில் உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் விஜய் என்ற பார்வையே தற்போது பரவலாக நிலவுகிறது.
