புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்படவிருந்த ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாக ரத்து செய்யப்பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருந்த காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்காக, பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்தச் செலவில் செய்து கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்டக் கல்வி அதிகாரி தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ₹8,000 முதல் ₹10,000 வரை செலவாகும் எனக் கூறப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மீது இதுபோன்ற தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆசிரியர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கைகளும் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. மேலும், அந்த சுற்றறிக்கையை அனுப்பிய அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்திற்கான அனைத்து ஆரம்பக்கட்ட விரிவாக்கச் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்கும் என்றும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை மாலை அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் வழங்கிய நேரடி அறிவுறுத்தலின் பேரில், கவனக்குறைவாகச் செயல்பட்ட கடலூர் மாவட்டக் கல்வித் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்தச் செலவில் வாங்கத் தேவையில்லை என்றும், மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து அவற்றை வழங்க வேண்டும் என்றும் அரசு புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சமையலறை பராமரிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது சொந்த நிதியிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியே கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்ததாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் இன்னசென்ட் திவ்யா விளக்கமளித்துள்ளார்.
ஆனால், அந்த உத்தரவை மாவட்டக் கல்வி அதிகாரி சரியாகப் புரிந்துகொள்ளாமல், செப்டம்பர் 9ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்தச் செலவில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தவறான சுற்றறிக்கையை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இரு முக்கியத் துறைகளுக்கு இடையே ஏற்பட்ட முறையான தகவல் பரிமாற்றக் குறைபாடே இந்தச் சர்ச்சைக்கு காரணமாக அமைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோல், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 15,414 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தவெக அரசு ₹710 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தட்டுகள் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்களே செலவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதே எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய விமர்சனப் பொருளாக அமைந்தது.
இந்தச் சர்ச்சை குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் விமர்சனம் தெரிவித்துள்ளார். ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரை மாற்றி, புதிய பெயர்ப்பலகை வைப்பதற்கான செலவையும் ஆசிரியர்கள் மீது சுமத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாற்றப்பட்ட புதிய பெயர்ப்பலகையின் முன்பு தலைமை ஆசிரியர்கள் நின்று புகைப்படம் எடுத்து, அதனை ஆதாரமாக அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனையும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் காமராசரின் பெயரிலான இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் தந்தை பெரியாரின் பிறந்தநாளாகவும் இருப்பதால், இந்த விழா அரசியல் ரீதியாக தவெக அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சுற்றறிக்கை விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தவெக அரசுக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவாக விமர்சித்தாலும், அரசுத் தரப்பு உடனடியாக தலையிட்டு சுற்றறிக்கையை ரத்து செய்ததுடன், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தனது தவறைத் திருத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை, செப்டம்பர் 12ஆம் தேதி மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
சனிக்கிழமை மாலை இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் அதிகாரிகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி திட்டத் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், இந்தச் சர்ச்சை மேலும் பெரிதாகி அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தவெக அரசு கொண்டு வந்துள்ள காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் தகவல் பரிமாற்றக் குறைபாடு காரணமாக அரசுக்கே தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசின் முக்கியத் திட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாட்டால் அரசுக்கே ‘செல்ஃப் கோல்’ விழுந்தது போன்ற சூழல் உருவான நிலையில், தற்போது அந்த விவகாரம் சரிசெய்யப்பட்டுள்ளது.
