அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், விஐபி ஜோதிடரான ரத்தன் பண்டிட்டின் பெயரையும், அவருடைய உயர் மட்ட தொடர்புகளையும் தவறாகப் பயன்படுத்திப் பணப் பறிப்பில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ஜோதிடர் ரத்தன் பண்டிட் குறித்து பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் விஜய், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்திப் பேசுகிறார். மேலும், தமிழக முதல்வர் விஜயுடனான நெருக்கத்தின் பேரில், தமிழக அரசு டெண்டர் உள்ளிட்ட விஷயங்களை முடித்துத் தருவதாகவும், முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் கூறுவது போன்ற அதிர்ச்சித் தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ரத்தன் பண்டிட் தரப்பினர் கூறுகையில், “ரத்தன் பண்டிட் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்று பலரிடம் பணம் பெறப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவரது பெயர் மற்றும் அவருக்கு இருப்பதாகக் கூறப்படும் அரசியல், திரையுலகத் தொடர்புகளைப் பயன்படுத்திப் பணம் வசூலிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராகவும், நடிகர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராகவும் ரத்தன் பண்டிட் அறியப்படுகிறார். அவர் ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகிறார். வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்களுக்கும், அரசியல் ஆளுமைகளுக்கும் ஆலோசகராக விளங்கும் அவர், விஜய்யின் அரசியல் வெற்றி குறித்தும் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சில சமூக விரோதிகள் அவரது அடையாளத்தைப் பயன்படுத்தி இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜயுடனான இவரது நெருக்கத்தைக் களங்கப்படுத்தி சிதைக்கும் நோக்கிலேயே இம்மாதிரியான குற்றங்கள் நடப்பதாகச் சந்தேகம் நிலவுகிறது. ரத்தன் பண்டிட் பெயரை வேறு ஒருவர் பயன்படுத்திப் பணம் வசூலிப்பது ஒருபுறம் இருக்க, இதன் மூலம் நேர்மையாகச் செயல்பட்டு வரும் ரத்தன் பண்டிட் மீதும் தேவையற்ற பழி விழும் சூழலை உருவாக்கி வருகின்றனர். ஒருவரது பெயர் மற்றும் புகழைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பெறுவதோடு, அவரது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளது.
அரசு டெண்டர், அரசியல் பிரபலங்களைச் சந்திப்பது உள்ளிட்ட விஷயங்களைச் செய்து தருவதாக யாரேனும் பணம் கேட்டால், அவர்களின் அடையாளத்தையும் அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் உறுதி செய்த பின்னரே எந்தவொரு பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

ரத்தன் பண்டிட் பெயரில் வெளியாகியுள்ள இந்த மோசடி குறித்த ஆடியோவும், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள தகவல்களும் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட போலி நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி, ரத்தன் பண்டிட் பெயரில் இயங்கி வந்த போலி வாட்ஸ்-அப் எண்களின் புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.
