அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் அவர் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணங்கள் மற்றும் சொகுசுப் பொருட்களின் மீதே குவிவது வழக்கம்.
அந்த வகையில், அண்மையில் மும்பையில் நடைபெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் 40-வது ஆண்டு நிறைவு விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் கலந்துகொண்ட விதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் அவர் கையில் வைத்திருந்த கைப்பை ஆகிய இரண்டின் மதிப்பு மட்டுமே பல கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. சில சொகுசுப் பொருட்கள் மதிப்பீடுகளின்படி, இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட பொருட்களின் சந்தை மதிப்பீடுகளின் அடிப்படையில் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 35.89 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ராதிகா தனது மணிக்கட்டில் அணிந்திருந்தது சாதாரண கைக்கடிகாரம் அல்ல. அது Patek Philippe Twenty~4 Haute Joaillerie, Ref. 4909-107G எனக் குறிப்பிடப்படும் மிகவும் அரிய சொகுசு வாட்ச் ஆகும். 18 கேரட் வெள்ளைத் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாட்சில் 1,700-க்கும் மேற்பட்ட வைரங்களும், சுமார் 300 மரகதக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படை சில்லறை விலை சுமார் 1,60,000 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.51 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த வாட்ச் மிகவும் அரிதான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ‘ஒன்-ஆஃப்-ஒன்’ மாடல் என்பதால், அதன் தற்போதைய சந்தை மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என சொகுசுப் பொருட்கள் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
குறிப்பாக, இந்த குறிப்பிட்ட வடிவமைப்பில் உலகம் முழுவதும் வெறும் ஐந்து வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாகவும், ராதிகா அணிந்திருந்த வாட்ச் அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான மாடல் என்றும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 16 கோடி ரூபாய் முதல் 18.89 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாட்சைத் தாண்டி, ராதிகா கையில் வைத்திருந்த சிறிய கைப்பையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது பிரபல பிரெஞ்சு சொகுசு பிராண்டான Hermès-ன் மிகவும் அரிய Sac Bijou Birkin மினியேச்சர் கைப்பை. பார்ப்பதற்கு சிறிய பை போல இருந்தாலும், இது வழக்கமான பொருட்களை வைப்பதற்கான கைப்பை அல்ல. வெள்ளைத் தங்கம் மற்றும் வைரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு ‘Wearable Sculpture’, அதாவது அணிகலனாகப் பயன்படுத்தக்கூடிய கலைப்படைப்பு போன்றது.
இந்த மினியேச்சர் கைப்பையில் 3,025 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 111 கேரட் என்றும் கூறப்படுகிறது. பிரபல வடிவமைப்பாளர் பியர் ஹார்டி இந்த கைப்பையை வடிவமைத்துள்ளார். உலகிலேயே மிகவும் அரிய மூன்று பைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படும் நிலையில், இதன் மதிப்பு மட்டும் சுமார் 17 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த அரிய Hermès Sac Bijou Birkin கைப்பை அம்பானி குடும்பத்துடன் ஏற்கனவே தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் பிரத்யேக சேகரிப்பில் இடம்பெற்றிருந்த இந்த கைப்பையை, அவர் முன்பு தீபாவளி பண்டிகை நிகழ்வின்போது பயன்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது அம்பானி குடும்பத்தின் மருமகளாக இருக்கும் ராதிகா மெர்ச்சன்ட், மாமியார் நீதா அம்பானியின் இந்த அரிய பொக்கிஷத்தைப் பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் மற்றொரு விவாதமும் எழுந்துள்ளது. ராதிகா அணிந்திருந்த வாட்ச் மற்றும் அவர் கையில் வைத்திருந்த பை ஆகியவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் என்றாலும், நகை நிபுணர்களின் கருத்துப்படி, அந்த இரண்டுமே ராதிகா அணிந்திருந்த ஆபரணங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடைய பொருட்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த பிரம்மாண்ட மரகத மாலையும் அதற்குப் பொருத்தமாக அணிந்திருந்த காதணிகளும் இதைவிட பல மடங்கு அதிக மதிப்புடையவை எனக் கூறப்படுகிறது.

மெல்லிய கயிறு போன்ற அமைப்பில் மிகப்பெரிய மரகதப் பதக்கம் தொங்கியபடி இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வளவு எடையும் மதிப்பும் கொண்ட நகைகளை அணிந்திருப்பது குறித்து நகை நிபுணர் ஜூலியா சோப் தெரிவித்த நகைச்சுவையான கருத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அளவிலான நகைகளைச் சுமக்க ராதிகாவுக்கு ஒரு பாடிபில்டரின் வலிமை தேவைப்படும் என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஆடையும் அவரது ஒட்டுமொத்த தோற்றத்திற்கு மேலும் கவனம் பெற்றுத் தந்துள்ளது. நவீன இந்திய கைவினைத் திறனைப் பறைசாற்றும் வகையில் பூ வேலைப்பாடுகள் கொண்ட ஆடையை அணிந்திருந்த அவர், மென்மையான மேக்கப் மற்றும் தனித்துவமான ஹேர் ஸ்டைலுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ராதிகாவின் கணவர் ஆனந்த் அம்பானியும் உலகின் மிக அரிய மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய வாட்ச்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர் எனப் பிரபலமாக அறியப்படுகிறார். குறிப்பாக, அவரது திருமண நிகழ்வின்போது அவர் அணிந்திருந்த வாட்ச்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தன. அந்த வகையில், கணவரைப் போலவே ராதிகா மெர்ச்சன்ட்டும் அரிய வாட்ச்கள் மற்றும் சொகுசுப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதை இந்த நிகழ்வின் மூலம் பார்க்க முடிகிறது.
வெறும் ஆடம்பரமாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் வகையிலான ராதிகா மெர்ச்சன்ட்டின் இந்த ஃபேஷன் தேர்வுகள், அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்டமான செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பல கோடி ரூபாய் மதிப்புடைய வாட்ச், உலகின் அரிய கைப்பைகளில் ஒன்றான Hermès Sac Bijou Birkin, பிரம்மாண்ட மரகத நகைகள் என ராதிகாவின் ஒட்டுமொத்த தோற்றமும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
