Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தனது பெண் அதிகாரிகளுக்கு தலா 45,000 டாலர், அதாவது சுமார் ரூ.37 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கிய விவகாரம் தற்போது அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ள வருடாந்திர சொத்து மற்றும் நிதி விவரப் பட்டியல்கள் (Financial Disclosures) மூலமாகவே இந்தத் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும், அவரது முக்கியப் பணிகளை கவனிப்பவர்களாகவும் உள்ள அதிகாரிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை காலப் பரிசாக (Holiday Gift) இந்த ரொக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிர்வாக உதவியாளராக பணியாற்றும் நடாலி ஹார்ப் (Natalie Harp), டிரம்பிற்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் அச்சிட்டு வழங்குபவர். இதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் அவரை “ஹியூமன் பிரிண்டர்” (Human Printer) என்றே அழைக்கின்றனர். அதேபோல், டிரம்பின் ஊடகத் தொடர்பு ஆலோசகராகவும் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

சேம்பர்லெய்ன் ஹாரிஸ் (Chamberlain Harris), ஓவல் அலுவலக செயல்பாடுகளின் துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன், டிரம்பின் நீண்டகால உதவியாளரான வால்ட் நௌடாவுக்கும் (Walt Nauta) 20,000 டாலர், அதாவது சுமார் ரூ.16 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களாகப் பணியாற்றி, ஆண்டுக்கு தலா 150,000 டாலர் சம்பளம் பெறும் அதிகாரிகளுக்கு, அவர்களது ஆண்டு சம்பளத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தொகையை அதிபர் தனிப்பட்ட முறையில் ரொக்கமாக வழங்கியிருப்பதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

அரசு ஊழியர்கள் வெளிப்புற நபர்களிடம் இருந்து பெரும் தொகையையோ அல்லது கூடுதல் சலுகைகளையையோ பெறக்கூடாது என்ற கூட்டாட்சி அறநெறி விதிமுறைகளை (Federal Ethics Rules) இந்தச் சம்பவம் மீறுவதாக அறநெறி வழக்கறிஞர்கள் (Ethics Lawyers) விமர்சித்துள்ளனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், டிரம்பிற்கு தனது வட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கும் நீண்டகாலப் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரொக்கப் பரிசுகள் அவர்களின் அரசுப் பணிகளுக்காக வழங்கப்படவில்லை என்பதால், சட்டப்பூர்வமாகவும், எத்திக்ஸ் விதிகளின்படியும் இவை முற்றிலும் அனுமதிக்கத்தக்கவை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  சர்வதேச கடல் எல்லையில் பதற்றம்..!- 3 இந்தியர்களைத் தேடும் பணி தீவிரம்..! மத்திய அரசு ஆவேசம்..!
Republic Tamil

இந்தப் பரிசைப் பெற்ற நடாலி ஹார்ப், மார்கோ மார்ட்டின் மற்றும் சேம்பர்லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் அரசுப் பணிக்கான ஆண்டு சம்பளம் 150,000 டாலர், அதாவது சுமார் ரூ.1.25 கோடி ஆகும். டிரம்ப் வழங்கிய 45,000 டாலர் போனஸ் தொகையையும் சேர்த்தால், இவர்களின் மொத்த ஆண்டு வருமானம் வெள்ளை மாளிகையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் (Chief of Staff) போன்ற உயர் அதிகாரிகளின் சம்பளத்திற்கு இணையாக உயர்ந்துள்ளது.

இந்தப் பெண் அதிகாரிகள் மட்டுமின்றி, டிரம்பின் ஓவல் அலுவலக செயல்பாட்டு இயக்குநரான வால்ட் நௌடாவுக்கும் 20,000 டாலர், அதாவது சுமார் ரூ.16 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே டிரம்பின் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் சிக்கியிருந்த நிலையில், பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் “ஹியூமன் பிரிண்டர்” என்று அழைக்கப்படும் நடாலி ஹார்ப், அண்மைக்காலமாக அமெரிக்க அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளார். சமீபத்தில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி, அதாவது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பி ஜான் ஓசாஃப் (Jon Ossoff), பொதுக்கூட்டம் ஒன்றில் நடாலி ஹார்பின் பெயரைக் குறிப்பிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார்.

டிரம்ப் அரசுப் பணிகளைச் செய்வதைவிட, நடாலி ஹார்புடன் மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பதாக ஜான் ஓசாஃப் குற்றம்சாட்டியிருந்தார். இதன் மூலம் நடாலி ஹார்ப் டிரம்பிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதும் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, வாஷிங்டனின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் புகழ்பெற்ற ‘கமிஷன் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ (Commission of Fine Arts) குழுவின் உறுப்பினராக நடாலி ஹார்ப்பை டிரம்ப் நியமித்துள்ளார். டிரம்பின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகை நடன அரங்கமான Ballroom அமைக்கும் பணியையும் இந்தக் குழு கண்காணித்து வருகிறது.

இதையும் படியுங்க  நான்கு மாத போரில் வென்றது யார்..? ஈரானா? அல்லது அமெரிக்காவா..?

நடாலி ஹார்ப், டிரம்பின் சமூக ஊடக வீடியோக்களை பதிவு செய்பவராகவும் உள்ளார். டிரம்ப் விமான நிலையங்களில் நடனமாடுவது போன்ற வைரலாகும் வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுவது இவர்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அரசாங்கத்தின் வெள்ளை மாளிகை அறநெறி வழக்கறிஞரான ரிச்சர்ட் பெயிண்டர் (Richard Painter), அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு வெளியே இருக்கும் நபர்களிடமிருந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கூடுதல் தொகையைப் பெறக்கூடாது எனக் கூட்டாட்சி சட்டம் (Federal Statute) உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ஊழியர்கள் அரசாங்கச் சேவையில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிதி உதவி செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் சட்டப்படி இதைச் செய்ய முடியாது என்றும் ரிச்சர்ட் பெயிண்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

மொத்தத்தில், டிரம்ப் தனது விசுவாசிகளுக்கு வழங்கியதாக கூறப்படும் ரொக்கப் பரிசுகளின் மொத்த மதிப்பு 155,000 டாலர், அதாவது சுமார் ரூ.1.30 கோடி ஆகும். இது டிரம்ப் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களுக்கு இடையேயான அசாத்திய நெருக்கத்தை காட்டுவதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவரான நடாலி ஹார்ப், எப்போதும் ஒரு போர்ட்டபிள் பிரிண்டர் (Portable Printer) மற்றும் பேப்பர்களைத் தன் கையிலேயே வைத்திருப்பார். அதிபர் டிரம்ப் செய்திகளை ஐபேட் அல்லது மொபைல் திரையில் படிப்பதைவிட, காகிதத்தில் அச்சிட்டுப் படிப்பதையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

டிரம்பிற்காக சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் அவருக்கு சாதகமான முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அச்சிட்டு வழங்குவதுதான் நடாலி ஹார்ப்பின் முக்கியப் பணியாக உள்ளது. இந்த அசாத்தியமான விசுவாசத்திற்காகத்தான் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கச் சட்டப்படி, அரசு அதிகாரிகள் தங்களின் கூடுதல் வருமானம் மற்றும் பெறும் குறிப்பிட்ட தொகைகள் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இந்தப் பெண் அதிகாரிகள் தாக்கல் செய்த நிதி விவரப் பட்டியலில், இந்தப் பரிசுத் தொகைக்கு நேராக “Cash Gift for Holidays” அதாவது “விடுமுறை நாட்களுக்கான ரொக்கப் பரிசு” என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "வளைகுடா நாடுகள் இனி அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது அல்ல!" கமெனி போட்ட 'டெலிகிராம்' குண்டு..!

இதுதான் தற்போது எதிர்க்கட்சியினரின் கைகளில் சிக்கி, அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பொதுவாக கிறிஸ்துமஸ் அல்லது விடுமுறை நாட்களில் அதிகாரிகள் தங்களுக்குள் ஒயின் பாட்டில்கள் அல்லது சாதாரண ஸ்வெட்டர்கள் போன்ற பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ஆனால், ஒரு அதிபர் தனது ஊழியர்களுக்கு தலா 45,000 டாலர், அதாவது சுமார் ரூ.37 லட்சம் ரொக்கமாக வழங்குவது சாதாரணமான விஷயம் அல்ல என்று முன்னாள் அரசு நெறிமுறை இயக்குநர் டான் பாக்ஸ் (Don Fox) மற்றும் சட்ட வல்லுநர்கள் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த அளவுக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்படுவது, அந்த ஊழியர்களை அதிபருக்கு கடன்பட்டவர்களாக உணர வைக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க ஊடகங்களின் தகவலின்படி, 45,000 டாலர் பரிசில் குறிப்பிட்ட ஒரு வரம்புக்கு மேல் செல்லும் தொகைக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த பணத்திற்கு முறையாக வரி செலுத்தினார்களா அல்லது வரி விலக்கு வரம்பிற்குள் இந்தப் பரிசை கொண்டுவர டிரம்ப் தரப்பு ஏதேனும் திட்டமிட்டதா என்ற பொருளாதார ரீதியான கேள்விகளும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

பரிசு பெற்றவர்களில் ஒருவரான வால்ட் நௌடா ஏற்கனவே டிரம்பின் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில், டிரம்ப் தனது ஊழியர்களுக்கு போதிய நிதிப் பாதுகாப்பை வழங்கவும், அவர்களின் வழக்கறிஞர் செலவுகளுக்கு உதவவும், அவர்களின் விசுவாசத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் இந்தப் ‘பரிசு’ என்ற பெயரில் ரகசிய போனஸ் வழங்கியிருக்கலாம் என வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இவ்வாறு, டிரம்ப் தனது நெருங்கிய பெண் அதிகாரிகளுக்கு தலா 45,000 டாலர் ரொக்கப் பரிசு வழங்கியதாக வெளியாகியுள்ள தகவல், அதன் சட்டபூர்வத் தன்மை, அரசு ஊழியர்களுக்கான அறநெறி விதிமுறைகள் மற்றும் அரசியல் ரீதியான தாக்கம் ஆகிய பல்வேறு கோணங்களில் அமெரிக்காவில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago